×

புதுச்சேரி, வடதமிழகத்தில் பருவமழை மாற்றத்தால் செங்கல் உற்பத்தி பணிகள் பாதிப்பு: விலை மேலும் உயரும் ஆபத்து

புதுச்சேரி:  புதுச்சேரி மட்டுமின்றி அதை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் அதிகளவில் செங்கல் சூளைகள் உள்ளன. மொத்தம் 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இப்பகுதிகளில் உள்ள நிலையில் இங்கு ஏராளமான தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். சமீபகாலமாக வடதமிழகம், புதுச்சேரியில் காலம் தவறி பொழியும் மழை மட்டுமின்றி ஆள் பற்றாக்குறை, மிலார் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செங்கல் விலை அவ்வப்போது மாறி வருகிறது.  முன்பெல்லாம் மழை காலங்களில் செங்கல் விலை எகிறினாலும் கோடை காலம் துவங்கியதும் இவற்றின் உற்பத்தி அதிகமாகி விலை கணிசமாக குறையும். ஆனால் சமீபகாலமாக பருவமழை மாறிப் பொழிவதால் செங்கல் அறுவடை பணிகள் அவ்வப்போது பாதிக்கப்படுகின்றன. இதனால் அவற்றின் விலையும் அவ்வப்போது எகிறி வருகிறது.

 புதுச்சேரியில் பத்துக்கண்ணு, சோரப்பட்டு, செல்லிப்பட்டு, அம்மானங்குப்பம், வம்புபேட், பிஎஸ் பாளையம் மற்றும் அதை ஒட்டிய தமிழக பகுதிகளான கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வருடந்தோறும் சித்திரை மாதத்தில் அதிகளவில் செங்கல் உற்பத்தி நடைபெறும். ஆனால் இந்தாண்டு காலம் தவறி பொழிந்த மழை காரணமாக உற்பத்தி பாதித்த நிலையில் செங்கல் விலை ஒன்றுக்கு ரூ.1 அதிகரித்துள்ளது.ஏற்கனவே கார்த்திகை மாதத்தில் ரூ.6.50க்கு விற்கப்பட்ட (வண்டி கூலியுடன்) ஒரு செங்கல் விலை தற்போது ரூ.7.50ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மிலார் தட்டுப்பாடு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் செங்கல் உற்பத்தி பணிகள் அவ்வப்போது பாதிக்கப்படுவதாக உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் வருங்காலங்களில் செங்கல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

இதுபற்றி செங்கல் சூளை உரிமையாளரான சரவணன் கூறுகையில், 1 லட்சம் செங்கல் உற்பத்திக்கு ரூ.1.50 லட்சம் மிலாருக்காக செலவழிக்க வேண்டியுள்ளது. இதுதவிர ஆள்கூலி, மிலார் ஏற்ற, இறக்க கூலி உள்ளிட்டவையும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற காரணங்கள் மட்டுமின்றி பருவமழை மாற்றம் காரணமாக அவ்வப்போது செங்கல் உற்பத்தி பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் அதிகளவில் சேதம் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்தாண்டு செங்கல் விலை சித்திரையில் அதிகரித்துள்ளது.கடந்த 2 ஆண்டில் உற்பத்தியை ஒப்பிடுகையில் இந்தாண்டு வெகுவாக பார்த்துள்ளது. ஒரு மழை பெய்தால் மீண்டும் செங்கல் உற்பத்திக்கான இடத்தை தயார் செய்ய குறைந்தது ஒரு வாரமாவது ஆகும் என்றார்.

Tags : Pondicherry ,North East , Pondicherry, Northeast, monsoon, brick production, impact
× RELATED வட கிழக்கு டெல்லியில் கன்னையா குமார் போட்டி: காங். அறிவிப்பு