மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசை சரத்பவார் கட்சி பலவீனப்படுத்துகிறது: மாநில காங். தலைவர் குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சரத்பவாரின் கட்சி பலவீனப்படுத்துகிறது என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்  நானா படேல் குற்றச்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்  மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படேல் பேசிய விபரங்கள் குறித்து, அவர் அளித்த பேட்டியில், ‘சரத் ​​பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) காங்கிரசை பலவீனப்படுத்தி வருகிறது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் தேசியவாத காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து கட்சி மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் காங்கிரசை என்சிபி பலவீனப்படுத்தி வருகிறது. நிஜாம்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனில் தேர்வு செய்யப்பட்ட 19 காங்கிரஸ் கவுன்சிலர்கள் தேசியவாத காங்கிரசில் இணைந்துள்ளனர். இதுதவிர, கோண்டியா ஜில்லா பரிஷத் தலைவர் தேர்தலில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கைகோர்த்தது. ஜில்லா பரிஷத் மற்றும் பிற நகராட்சி அமைப்புகளின் காங்கிரஸ் பிரதிநிதிகள், தங்களது பகுதியின் வளர்ச்சிப் பணிகளைச் செய்ய போதுமான பணம் ஒதுக்குவதில்லை’ என்றார்.

Related Stories: