×

புதுச்சேரி குருசுகுப்பத்தில் போதை மாத்திரை, பவுடர் விற்ற ஆப்பிரிக்க மாணவர்கள் கைது: சுற்றுலா விசாவில் தங்கியிருந்த இளம்பெண்ணும் சிக்கினார்

புதுச்சேரி: புதுச்சேரி, குருசுகுப்பத்தில் போதை மாத்திரை, பவுடர் விற்ற 2 ஆப்பிரிக்க மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களுடன் சுற்றுலா விசாவில் வந்து பெரிய முதலியார்சாவடியில் தங்கியிருந்த இளம்பெண்ணும் பிடிபட்டார். 3 பேரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புதுச்சேரியில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ள நிலையில் அவற்றை முழுமையாக ஒடுக்கும் நோக்கில் ஐஜி சந்திரன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி முத்தியால்பேட்டை காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று ரோந்து மேற்கொண்டனர். அப்போது குருசுகுப்பம், மரவாடி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒரு பெண், 2 வாலிபர்கள் உள்பட 3 பேரை சுற்றிவளைத்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணான பேசியதால், சோதனையிட்டனர். எம்டிஎம்ஏ என்ற போதை ரக மாத்திரையும், கொசைன் என்ற போதை பவுடர்களையும் பதுக்கி வைத்திருந்தது தெரியவரவே அதிர்ச்சியடைந்தனர். மொத்தம் 30 எண்ணிக்கையிலான எம்டிஎம்ஏ போதை மாத்திரை, 23 போதை பவுடர் பாக்கெட்டுகளையும் கைப்பற்றி, முத்தியால்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து அதிரடியாக விசாரித்தனர்.

அவர்கள், ஆப்பிரிக்க நாடுகளான தன்ஷானியாவை சேர்ந்த ஜான் மகள் ஜஸ்டின் டெல்வின் (25) என்பதும், சுற்றுலா விசாவில் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வருகை தந்து பெரிய முதலியார்சாவடி, வடக்கு தெருவில் வசிப்பதும் தெரியவந்தது. மேலும் இவருடன் சிக்கியவர்கள் சூடானை சேர்ந்த டேவிட் மைக்கேல் எலியா (26), தற்போது கடலூர் மாவட்டம், சிதம்பரம் 2வது குறுக்குத் தெருவில் வசிப்பதும் மற்றொருவரான கென்யாவின் பிரான்சிஸ் லக்கி ஒட்ரி (22) என்பவர், சேலம், டீச்சர்ஸ் காலனியின் தங்கியிருப்பதும் அம்பலமானது. போதை மாத்திரை மற்றும் போதை பவுடர்களை புதுச்சேரியில் உள்ள மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு விற்பதற்காக தமிழகத்தில் தனித்தனி இடங்களில் தங்கியிருந்த மூவரும் குருசுகுப்பத்தில் சந்தித்து சப்ளை செய்ய காத்திருந்ததும் தெரியவந்தது. 3 பேர் மீதும் போதை பொருள் தடுப்பு பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி உயரதிகாரிகள் மூலம் அந்தந்த நாட்டின் தூதரகத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, இன்று மூவரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கின்றனர். கைதானவர்களில் ஜஸ்டின் டெல்வினை தவிர மற்ற 2 வாலிபர்களும் கல்லூரி படிப்பு தொடர்பாக இந்தியா வந்து தமிழகத்தில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான தகவல்களை புதுச்சேரி காவல்துறை தொடர்ந்து சேகரித்து வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து புதுச்சேரியை ஒட்டியுள்ள ஆரோவில் பகுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஒரு பாக்கெட் ₹1,500க்கு விற்பனை
எம்டிஎம்ஏ போதை மாத்திரை மற்றும் போதை பவுடரை உட்கொள்பவர்கள் 14 மணி நேரம் போதையில் மிதப்பர். ஒரு மாத்திரையை ரூ.800க்கும், கொசைன் பவுடரை ரூ.1,500ம் கொடுத்து மாணவர்கள், இளைஞர்கள் வாங்கி உண்டுள்ளனர். சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்களை பிடித்து இதுபோன்ற உயர்ரக போதை ரகங்களை வெளிநாட்டு கும்பல் விற்று வந்துள்ளது. இதற்கு மூளையாக செயல்படும் ஆசாமிகள் யார்? என்பது தெரியவராத நிலையில் இதுதொடர்பான விசாரணையை புதுச்சேரி காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.
ஏற்கனவே லாஸ்பேட்டை பகுதியில் இதுபோன்று கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்ற ஆசாமிகளை பிடித்து போலீசார் சிறையிலடைத்தனர். மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவர் இதன் விற்பனையில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு பெங்களூருவில் இருந்து சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது. தற்போது அதைவிட கூடுதல் போதை தரக்கூடிய போதை மாத்திரை, பவுடர்களை வெளிநாட்டு கும்பல் விற்பது புதுச்சேரி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Pondicherry Crucifixion , Puducherry, drug, powder, African students, arrested
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி