கடலூரில் தேர்வில் தோல்வி பயம் காரணமாக மகளிர் கல்லூரி கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது: போலீசார் விசாரணை

கடலூர்: கடலூர் மகளிர் கல்லூரியில் தூக்குபோட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே உள்ள கோண்டூரில் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி உள்ளது. இன்று காலை, அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவர், கல்லூரிக்கு வந்துள்ளார். அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது, மாணவி ஒருவர் நைட்டி அணிந்தபடி, கழுத்தில் கல்லூரி அடையாள அட்டையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார். உடனே கல்லூரி நிர்வாகத்தினர், கடலூர் புதுநகர் போலீசாருக்கு தெரிவித்தனர்.

டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் தலைமையில், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், விரைந்து வந்து, மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், அந்த மாணவி விழுப்புரம் மாவட்டம் சின்னபாபுசமுத்திரம் பகுதியை சேர்ந்த, நாகலிங்கம் மகள் தனலட்சுமி (19) என்பதும், இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு வணிகவியல் படித்து வந்ததும் தெரியவந்தது. மாலைநேர வகுப்பில் படித்து வந்த அவர் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற அவரை, நேற்று மாலை அவரது தந்தை கல்லூரி விடுதியில் கொண்டு வந்து விட்டு சென்றாராம். இந்நிலையில் இன்று காலை கல்லூரி கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அவர் எழுதி வைத்திரந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

கடிதத்தை தனலட்சுமி தனது தம்பியான சக்தி என்பவருக்கு, எழுதியுள்ளார். அதில், எனக்கு உன்னையும், அப்பா அம்மாவையும் மிகவும் பிடிக்கும். உனக்கு வீட்டில் ஆயிரம் ரூபாய் பணம் வைத்துள்ளேன். அதை வைத்து ஒரு வாட்ச் வாங்கி கொள். நான் தேர்வில் தோல்வியடைந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அதனால் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன்’ என்று எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: