×

நாளை ஒன்றிய அமைச்சர்களுடன் தமிழ்நாடு எம்.பி.க்கள் சந்திப்பு: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

சென்னை: பருத்தி, நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நாளை ஒன்றிய அமைச்சர்களை நேரில் தமிழக எம்.பிக்கள் சந்திக்கின்றனர். ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயலை திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் நாளை சந்திக்க உள்ளனர். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழிலும்- அதை நம்பியுள்ள நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதை விரிவாகச் சுட்டிக்காட்டி- மாண்புமிகு முதல்வர் அவர்கள் “பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுத்திடவும், நெசவாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை விரைவில் களைந்திடவும்” மூன்று மிக முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்து பிரதமர் நரேந்திரமோடி நேற்றைய தினம் கடிதம் எழுதியிருந்தார்.

அதில் மிக முக்கியமாக- தொழில்துறையிலும், நெசவாளர்கள் மத்தியிலும் அதிகரித்து வரும் அதிருப்தி கவலையளிப்பதாகவும், பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நெசவாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு அவர்களை தொடர் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. பொருளாதார இழப்புகளை சந்திக்கும் ஜவுளித் தொழிலில் ஒரு அசாதாரணமான சூழல் உருவாகியிருக்கிறது. ஆகவே, இவற்றையெல்லாம் மனதில் கொண்டு- திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழு துணை தலைவர் திருமதி கனிமொழி அவர்கள் தலைமையில் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சென்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களையும்,

ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அவர்களையும் நாளைய தினம் (18.5.2022) சந்தித்து நெசவாளர்கள் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்று நேரில் வலியுறுத்துமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார். நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும், அவர்களின் இன்னல்களை நீக்கவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஒன்றிய அரசினையும் தொடர்ந்து வலியுறுத்தும் என்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Union , Tamil Nadu MPs to meet Union ministers tomorrow: Urge to curb yarn price hike
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...