×

சேத்துப்பட்டு அருகே சொத்து தகராறில் தம்பி சுட்டுக்கொலை மாஜி ராணுவ வீரர், மனைவியுடன் கைது: பல மணிநேர சமரசத்திற்கு பின் சடலம் போலீசாரிடம் ஒப்படைப்பு

சேத்துப்பட்டு: சொத்து தகராறில் தம்பியை சுட்டுக்கொலை செய்த முன்னாள் ராணுவவீரர் மற்றும் உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். பல மணி நேரம் அதிகாரிகள் நடத்திய சமரசத்திற்கு பின்னர் இன்று அதிகாலை சடலத்தை போலீசாரிடம் உறவினர்கள் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு, விவசாயி. இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. மகன் ஜெகதீசன் (50), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். ஜெகதீசனின் தம்பி கோதண்டராமன் (38), திருமணமாகாதவர். தேசிங்குவுக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக ெஜகதீசனுக்கும், கோதண்டராமனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் கோதண்டராமன், தாய் தேவகியுடன் தேவிகாபுரத்தில் வசித்து வந்தார். நேற்று மாலை கரிப்பூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு கோதண்டராமன் சென்றார். அப்போது அண்ணன், தம்பிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெகதீசன், கோதண்டராமனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மார்பில் குண்டு பாய்ந்ததில் கோதண்டராமன் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து போளூர் டிஎஸ்பி குமார், சேத்துப்பட்டு போலீசார், சம்பவ இடம் வந்து சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால் சடலத்தை எடுக்க மறுப்பு தெரிவித்த உறவினர்கள், தம்பியை கொன்ற ஜெகதீசனையும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சிவகாமியையும் கைது செய்ய வேண்டும். ஜெகதீசனின் சொத்துக்களை பறிமுதல் செய்து தாய் தேவகியின் பெயரில் எழுதவேண்டும், அதுவரை சடலத்தை எடுக்க கூடாது’ என கூறி போராட்டம் நடத்தினர். இதையறிந்த திருவண்ணாமலை ஏடிஎஸ்பி மற்றும் திருவண்ணாமலை டிஎஸ்பி குணசேகரன், வந்தவாசி டிஸ்பி விசுவேஸ்வரய்யா, செய்யாறு ஆர்டிஓ விஜயராஜ், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜி ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள், தங்கள் ேகாரிக்கை நிறைவேறும் வரை சடலத்தை கொடுக்க மாட்டோம் என்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அதிகாலை 2.30 மணியளவில் சடலத்தை கொண்டு செல்ல உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கோதண்டராமன் சடலத்தை சேத்துப்பட்டு போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ேசத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி சிவகாமியை தேடினர். போளூரில் பதுங்கியிருந்த ஜெகதீசனை போளூர் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். கண்ணமங்கலம் அடுத்த அம்மாபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்த சிவகாமியை கண்ணமங்கலம் போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chetput , Chetput, in property dispute, brother shot, arrested
× RELATED ஆரணி, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு...