×

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராம அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.5.2022 அன்று திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  

இவ்விபத்தில் அரியகுளம் கிராமம், ஆயர்குளத்தைச் சேர்ந்த திரு.பரமசிவன் என்பவரின் மகன் திரு.முருகன் (வயது 23) மற்றும் நான்குநேரி, இளையார்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் திரு.செல்வன் (வயது 25) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுதவிர, தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Nellai quarry ,Chief Minister ,MK Stalin , Rs 15 lakh each to be paid to families of victims of Nellai quarry accident: Chief Minister MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...