திருவண்ணாமலைக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுமா?.. வெளியூர் பக்தர்கள் தொடர்ந்து தவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். தென்னகத்து கயிலாயம் என போற்றப்படும் ஆன்மிக நகரம் திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாக அமைந்திருக்கிறது அண்ணாமலையார் கோயில். எண்ணற்ற ஞானிகளையும், மகான்களையும் தன்னகத்தே ஈர்த்த பெருமைக்குரிய சிவாலயம் அமைந்த இந்நகரம், நினைக்க முக்தி தரும் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

திருவண்ணாமலையில் மலையே வடிவமாக இறைவன் காட்சியளிப்பதால், மாதந்தோறும் பவர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். ஆனால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் எளிதில் பயணிக்கும் வகையில் ரயில் போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மீண்டும் கிரிவலத்துக்கு அனுமதி கிடைத்திருப்பதாலும், கடந்த சில மாதங்களாக கிரிவல பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருக்கிறது.

ஆனால், அதற்கு தகுந்தபடி ரயில் போக்குவரத்து வசதியில்லை. எனவே, ஒவ்வொரு பவுர்ணமிக்கும் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் தவிக்கின்றனர். ஆனாலும், தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்காமல் ஆன்மிக நகரை புறக்கணித்து வருகிறது. திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் - காட்பாடி இடையே அமைந்திருந்த மீட்டர் கேஜ் ரயில்பாதை, மின்மயமான அகல ரயில்பாதையாக மாறி பல ஆண்டுகளாகிறது. எனவே, தேவையான எண்ணிக்கையில் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான வசதிகள் முழுமையடைந்துவிட்டன.

ஆனாலும், பவுர்ணமி கிரிவல நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவதில்லை. ேமலும், வழக்கமாக இயக்கப்படும் தினசரி பாசஞ்சர் ரயில்களையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கவில்லை. தற்போது, தினமும் ஒரு நடை மட்டுமே விழுப்புரம் - திருப்பதிக்கு திருவண்ணாமலை வழியாக ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை 6.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து காட்பாடி வழியாக சென்ற ரயிலில் பயணிக்க ஆயிரக்கணக்கான கிரிவல பக்தர்கள் குவிந்தனர். அதனால், ரயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.

ரயிலில் இடம் கிடைக்காமல் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது. எனவே, இனிவரும் மாதங்களில் பவுர்ணமி கிரிவலத்தன்று சென்னையில் இருந்தும், தென் மாவட்டங்களில் இருந்தும் விழுப்புரம் மற்றும் காட்பாடி வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: