×

திருப்பதி ஏழுமலையான் கோயில்; வைகாசி மாத பவுர்ணமி கருட சேவை: மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். நேற்று வைகாசி மாத பெளவுர்ணமியை முன்னிட்டு இரவு கோவிலில் இருந்து புறப்பட்ட வாகனம் மண்டபத்தை அடைந்து மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். கொட்டும் மழையிலும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  யானைகளின் உலா பகதர்கள் கோலாட்டம் என களைகட்டியது. பக்தர்களும் விடாது பெய்த மழையிலும் மாடவீதிகளில் காத்திருந்து ஏழுமலையானின் கருட வாகன சேவையை தரிசித்தனர்.

கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு திருப்பதியில் பெளவுர்ணமி நாட்களில் கருட வாகனத்தில் உலா வருகிறார் மலையப்பசுவாமி. ஒவ்வொரு மாதமும் பெளவுர்ணமி அன்று இரவு 7 மணியளவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வரர் சாமி கோயிலில் வைகாசி மாத பவுர்ணமியையொட்டி புஷ்பயாகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கபிலேஸ்வரர் சாமி காமாட்சி ஆகியோருக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சம்பங்கி, ரோஜா, மல்லி, கனகாம்பரம், உள்ளிட்ட  11 வகையான பூக்கள் மற்றும் 5 வகையான இலைகளை கொண்டு புஷ்பயாகம் நடைபெற்றது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட இரண்டரை டன் மலர்களை கொண்டு நடந்தபட்ட புஷ்பயாகத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்று ஏழுமலையானை வழிபட்டனர்.


Tags : Tirupati Ezhumalayan Temple ,Malayappa Swami , Tirupati Ezhumalayan Temple, Vaikasi month Pavurnami Karuda service, Malayappa Swami golden Karuda vehicle
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத...