முதல்போக நெல் சாகுபடிக்காக ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

ஆனைமலை:கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, கோட்டூர், கோபாலபுரம், அம்பாராம்பாளையம், வேட்டைகாரன்புதூர், ரமணமுதலிபுதூர், காளியாபுரம், ஒடையகுளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை மற்றும் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பை  பொறுத்து விவசாயிகள், தங்கள் விளை நிலங்களை உழவு பணி மேற்கொண்டு நெல் சாகுபடி மேற்கொள்கின்றனர். இந்தாண்டு துவக்கத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட ஆனைமலை மற்றும் கோட்டூர் பகுதியில் இரண்டாம் போக ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்பின், சில நாட்களில் நாற்று நடவு செய்யப்பட்டது. நல்ல விளைச்சலடைந்த நெல் மணிகள் கடந்த மாதத்தில் அறுவடை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல் போக நெல் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் களம் இறங்கினர். இதற்கிடையே, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கான கருத்துருவும் அரசுக்கு பொதுப்பணித்துறையினர் அனுப்பி வைத்தனர்.

ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான உத்தரவு இரண்டு நாட்களுக்கு முன்பு வரப்பெற்றது.இதையடுத்து நேற்று, ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, தண்ணீர் திறப்பை துவக்கி வைத்து மலர் தூவினார். ஆழியார் அணையில் உள்ள சிறுபுனல் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர், பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால் வழியாக சென்றது. இந்த தண்ணீர் திறப்பு வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை 152நாட்களுக்கும் மொத்தம் 1205 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன்மூலம், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட 5 வாய்க்கால்களின் மூலம் 6400 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், எம்பி சண்முகசுந்தரம், சப்-கலெக்டர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், தலைமை பொறியாளர் முத்துசாமி, கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்,

துணை தலைவர் கவுதமன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மெடிக்கல் பரமசிவம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல்செல்வராஜ், ஒன்றிய பொறுப்பாளர்கள் தேவசேனாதிபதி, யுவராஜ், கன்னிமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், பேரூராட்சி கவுன்சிலர் அபுதாகிர் மற்றும் நவநீதகிருஷ்ணன், ஜெயகுமார், மாணிக்கராஜ், சேரன்நகர் சுரேஷ், அம்பராம்பாளையம் பைசில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: