×

ஊட்டியில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை அமோகம்: உரிய நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

ஊட்டி:  ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
நீலகிரி  மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் சமயத்தில்  ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகையை தொடர்ந்து ஊட்டி நகரில் உள்ள சில  ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து விடும். அதிக  கட்டணம் வசூலிப்பதில் அக்கறை கட்டும் சில ஓட்டல்கள், தரமான உணவுகள், குடிநீர் போன்றவற்றை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக கோடை சீசன் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கோடை விழாக்கள்  நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஊட்டியில் கோடை சீசன் களை கட்ட துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப ஊட்டியில் உணவு பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. நகாில் உள்ள பல ஓட்டல்கள், உணவகங்களில் தரமற்ற உணவுகள், குடிநீர் வழங்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் பாிமாறப்படுவதாகவும், குறிப்பாக பல நாட்களுக்கு முன்பு வாங்கப்பட்ட இறைச்சிகளை குளிர்பதன பெட்டியில் வைத்து தேவைக்கேற்ப எடுத்து  பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை  அதிகாரிகள் ஆய்வு நடத்தி சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான  குடிநீர் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். இருந்தபோதும் இவற்றையெல்லாம்  ஓட்டல்கள், உணவகங்கள் கண்டுகொள்வதில்லை. சுற்றுலா பயணிகளை குறி வைத்து  தரமற்ற உணவுகள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள்  மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மாவட்ட  நிர்வாகம் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவுகள்,  குடிநீர் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். தரமற்ற உணவுகளை விற்கும்  ஓட்டல்கள் மீது கடுமையான அபராதம் மற்றும் சீல் உள்ளிட்ட நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Ooty , Sales of substandard food items in Ooty: urging tourists to take appropriate action
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்