காஷ்மீர் தொகுதி மறுவரையறை: இஸ்லாமிய அமைப்பிற்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (ஐஓசி) இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் தனது இறுதி அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது.

இந்நிலையில், 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஐஓசியின் ஆண்டுக்கூட்டம் சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்தது. இதைத் தொடர்ந்து ஐஓசியின் டிவிட்டர் பதிவில் நேற்று காஷ்மீர் தொகுதி மறுவரையறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டது. அதில், ‘இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்த ஜம்மு காஷ்மீரின் தேர்தல் எல்லைகளை மீண்டும் வரையறுக்க முயற்சிப்பது மற்றும் பிரதேசத்தின் மக்கள்தொகை கட்டமைப்பை மாற்றுவது காஷ்மீர் மக்களின் உரிமைகளை மீறுவதாகும். இது குறித்து ஐஓசி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது’ என கூறப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து ஐஓசி மீண்டும் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாக ஜம்மு காஷ்மீர் எப்போதும் இருக்கும். ஐஓசி கூறியதை இந்திய அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இந்தியாவுக்கு எதிராக ஒருநாட்டின் உத்தரவின் பேரில் ஐஓசி செயல்படுவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: