கோத்தபயவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம்; அதிபரை ஓரங்கட்ட ரணில் திட்டம்: அதிகாரங்களை குறைப்பது தொடர்பாக ஆலோசனை

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்க உள்ள நிலையில், அவரது அதிகாரங்களை குறைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக ஏற்பட்ட போராட்டம், வன்முறை காரணமாக, கடந்த 9ம் தேதி மகிந்தா ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இருந்தும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக கோரி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, புதிய அரசு அமைக்க அனைத்துக்கட்சிகளுக்கு அதிபர் கோத்தபய அழைப்பு விடுத்தார். ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா, ‘அதிபரின் அதிகாரத்தை குறைக்க, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் போன்ற 4 நிபந்தனைகளை முன்வைத்தார். இந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்த கோத்தபய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, கடந்த 12ம் தேதி நாட்டின் 23வது பிரதமராக பதவியேற்றார். அவர் பிரதமராக பதவியேற்பது 6வது முறையாகும். தொடர்ந்து, முதல்கட்டமாக 4 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

 

முன்னதாக, மகிந்தா அரசின் மீதும், அதிபர் கோத்தபய மீதும், பிரதான  எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா, முக்கிய தமிழர் கட்சியான டிஎன்ஏ, முன்னாள் பிரதமர் ரணில்  விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) ஆகிய கட்சிகள் தனித்தனியே நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரிடம் அளித்தன. மகிந்தா ராஜினாமா செய்ததாலும், அமைச்சரவை கலைக்கப்பட்டதாலும், அந்த தீர்மானம் செல்லாதவையானது. இதனால் கோத்தபய மீது அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோத்தபய மீது அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிபர் கோத்தபய தோற்றாலும், இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபரை வெளியேற்ற முடியாது. அவர் மீது  தொடர் கண்டன தீர்மானங்கள் கொண்டு வந்தபிறகே வெளியேற்ற முடியும். அதே நேரத்தில், இலங்கை அரசியலமைப்பின் 40வது பிரிவின்படி, அதிபர் ராஜினாமா தாமாக முன்வந்து ராஜினாமா செய்தால், மீதமுள்ள பதவிக் காலம் அல்லது புதிய அதிபரை தேர்வு செய்யும் வரை பிரதமரே அதிபராக செயல்படுவார்.

அந்த வகையில், பிரதமர் விக்ரமசிங்கே அதிபராக செயல்பட வாய்ப்புள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் 20 ஏ சட்ட திருத்தத்தை ரத்து செய்து, 21வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து அரசு தலைமை வழக்கறிஞர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, 21வது சட்ட திருத்தம் செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின், இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் நிறைவேறினால், மீண்டும் பல் இல்லா பாம்பாக அதிபர் கோத்தபய இருப்பார் என்று கூறப்படுகிறது.

விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்க முடிவு

பிரதமராக பதவியேற்ற பின் ரணில் விக்ரமசிங்கே நேற்று முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் கூறுகையில், ‘‘தற்போது நாட்டில் ஒருநாளைக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே கையிருப்பில் உள்ளது. 14 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிவாயு கொண்டு வந்த கப்பலுக்கு கூட பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க லங்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்க பரிந்துரைத்துள்ளேன். இந்த விமான நிறுவனத்தால் ₹37,500 கோடி இதுவரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இனியும் இதை அரசு நடத்தினால் அதனால் ஏற்படும் நஷ்டத்தை தாங்க வேண்டியிருக்கும்’’ எனக் கூறினார்.

ரணிலுக்கு சஜித் ஆதரவு

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவருக்கு ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி மட்டுமே ஆதரவு அளித்தது. நாடாளுமன்றம் இன்று கூட உள்ள நிலையில், எதிர்கட்சிகள் தங்களது ஆதரவை தந்து அமைச்சரவையில் பங்கெடுக்க வேண்டும் என்று என்று எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, முன்னாள் அதிபர் சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தது.

முக்கிய எதிர்க்கட்சியான மகி ஜன பலவேகயா, நிபந்தனையுடன் பிரதமர் ரணிலுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க பிரதமர் ரணிலுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தங்கள் கட்சியின் எம்பிக்களை, கொள்கைக்கு எதிராக விலைக்கு வாங்க முயற்சித்தால், தங்களது ஆதரவை திரும்ப பெறுவோம்’ என்று நிபந்தனையுடன் ஆதரவை தெரிவித்துள்ளது.

21வது சட்ட திருத்தம் என்ன?

* இலங்கை அரசியலமைப்பின் 19வது சட்ட திருத்தம், 2015 ஏப்ரலில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவினால் அவசரமாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பிரதமரை தனது விருப்பப்படி பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட அதிபர் அதிகாரங்கள் நீக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

* கோத்தபய அதிபராக பதவியேற்ற பின், அக்டோபர் 2020ல் அரசியலமைப்பின் 20வது சட்ட திருத்தமும் செய்யப்பட்டது. இது, மீண்டும் அதிபருக்கு பல அதிகாரங்களை (20 ஏ) வழங்க வகை செய்தது.

* தற்போது. 20 ஏ சட்ட திருத்தம் ரத்து செய்து, 21வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் செய்வதன் மூலம், அதிபரிடம் இருந்து சில முக்கிய அதிகாரங்கள் நீக்கப்படும். அதிபரின் கீழ் முப்படைகள் செயல்படுவார்கள். நிர்வாகம், அமைச்சரவை பிரதமருக்கு செல்லும். நாடாளுமன்றத்திற்கு மீண்டும் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.

Related Stories: