×

மாற்றுத்திறனாளிகளுக்கு நீல நிற அட்டை வழங்குவதோடு வேலைக்கான ஊதியம் வழங்குவது உறுதி செய்யப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வேலை அட்டை கோரும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நீல நிற  அட்டை வழங்குவதோடு மாநில அரசின் சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி  அவர்களுக்கு வேலை  குறித்த காலத்திற்கும் அதற்கான ஊதியத்தினையும்  வழங்குவது உறுதி செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி திறன்சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுடைய வயது வந்தோரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ஆண்டொன்றிற்கு 100 நாள்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு 1 மணி நேர உணவு இடைவெளியுடன் கூடிய 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இவ்வேலைக்கான தினசரி ஊதியம் ரூ.281 எனவும் இம்முழு ஊதியத்தினை பெற 37 கன அடி வேலை செய்ய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரவர் செய்யும் வேலையின் அளவிற்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக  மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு ஊரக விலைப் புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாற்றுத்திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பணித்தளத்தில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்குதல், குழந்தைகளை பராமரித்தல், முன் அளவீடு செய்ய உதவுதல் மற்றும் சிறு வேலைகளான பணித்தளத்தில் அகற்றப்பட்ட மரங்களை அப்புறப்படுத்துதல் (இலை, தழைகள் மற்றும் சிறு மரங்கள்) கரைகளை சமன்படுத்துதல், கரைகளின் சரிவுப்பகுதிகளை சீர்செய்தல் போன்ற பணிகள் மட்டுமே செய்ய வரையறுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தின் இத்தகைய தனித்துவமான  செயல்பாட்டினை ஒன்றிய அரசு பாராட்டியுள்ளதோடு இதர பிற மாநிலங்களும் பின்பற்றி செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலை கோரும் தகுதியுடைய  அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நீல நிற வேலை அட்டை வழங்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு 2 கி.மீ தூரத்திற்குள் மட்டுமே வேலை வழங்கப்படுவதுடன் வேலைக்கான ஊதியம் குறிப்பிட்டுள்ள 15 நாட்களுக்குள் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக ஈடுசெய்யப்பட்டு எவ்வித தாமதமும் ஏற்படாத வண்ணம் அலுவலர்களால் உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு முகாமில் இவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர இரு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவில் குறை கேட்கும் நாள் நடத்த திட்ட இயக்குநர்களுக்கும் வட்டார அளவில் மாதந்தோறும் நடத்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இத்திட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வேலை அட்டை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரது கையொப்பத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் முகமை கிராம ஊராட்சி ஆதலால் அதன் தலைவரது கையொப்பத்துடன் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தினை ஊராட்சி செயலர், ஊராட்சி மன்றத்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் இதில் எவரேனும் ஒருவரிடம் வழங்கலாம். இவ்வேலை அட்டையினை வழங்க எவ்வித முன் நிபந்தனைகளுமின்றி கோரும் அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

தினமும் இரு முறை தொழிலாளர்களது வருகையினை புகைப்படம் எடுத்தல் வேண்டும் என்பது ஒன்றிய அரசின் அறிவுறுத்தலாகும். இதனை மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே வேலை அட்டை கோரும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நீல நிற அட்டை வழங்குவதோடு மாநில அரசின் சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவர்களுக்கு வேலையும் குறித்த காலத்திற்கும் அதற்கான ஊதியத்தினையும் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Granting blue card to the disabled and ensuring payment for the job: Government of Tamil Nadu Announcement
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...