×

தங்கள் நாட்டு வளர்ச்சிக்காக தமிழக தொழில்நுட்பங்களை ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றனர்: பிற மாநிலங்களில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்; ஆளுநர் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1600 ஆண்டுகளில் இருந்து தமிழகத்தின் பல்வேறு தொழில்நுட்பங்களை ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை பல்கலைக் கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் தலைமைதாங்கி பட்டங்களை வழங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும் போது முதலில் தமிழில் தனது உரையைத் தொடங்கி இறுதியில் தமிழில் முடித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் மற்ற மாநிலங்களில்  உள்ள வாய்ப்புகளைக் காட்டிலும் தமிழகத்தில்  அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் கல்வி, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் முன்பே  வளர்ச்சி கண்டு இருந்தது. சுமார் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பை உருவாக்கி பல பொருட்களை தயாரித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப் பேரவையில் தெரிவித்தார். அதற்காக அவருக்கு நன்றி. தமிழகம் கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. சாதாரண மக்களும் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விவரங்களை புரிந்து கொள்ள வசதியாக அந்தந்த மாநில மொழியில் வழக்காட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். அதற்கேற்ப தமிழக முதல்வரும் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். தமிழகத்துக்கு ஆங்கிலேயர்கள் 1,600ம் ஆண்டுக்கு பிறகு வந்தபோது, இங்கிருந்த கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தைத்தான் முதலில் தங்களுக்காக எடுத்துக் கொண்டனர்.

மேலும், ஆங்கிலேயர்கள் இரும்பை கண்டுபிடித்து அதை இங்கு விற்பதற்காக எடுத்து வந்தபோது, அதை இங்குள்ளவர்கள் வாங்கவில்லை. அதற்கு காரணம் அவர்கள் கொண்டு வந்த இரும்பைவிட தரமான இரும்பை இங்குள்ளவர்கள் பயன்படுத்தியதுதான். சென்னை மாகாணமாக இருந்தபோது, இங்குள்ள விவசாயிகள் வரி செலுத்த முடியாமல் தவித்தனர். அப்போது இங்கிருந்த ஆளுநர் மன்றோ, விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கும் வகையில் வரிகளை குறைத்தார். இப்படிப் பல ஆதாரங்களை சொல்ல முடியும்.

இங்குள்ள தொழில் நுட்பங்கள் அவர்களால் எடுத்து செல்லப்பட்டன. தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் 3வது மொழியாக தமிழ் படிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். தமிழக முதல்வரும் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும்.


Tags : British ,Governor , The British took up Tamil technologies for the development of their country: to establish Tamil seats in other states; Governor's speech
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்