சென்னை: சென்னை பல்கலைக் கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் சென்னை பல்கலைக் கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராக பங்கேற்று விழாவில் உரையாற்றினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக் கழக இணை வேந்தருமான பொன்முடி வாழ்த்திப் பேசினார். முன்னதாக பல்கலைக் கழக துணை வேந்தர் கவுரி சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆண்டு அறிக்கை குறித்து பேசினார். இந்த பட்டமளிப்பு விழாவில் சென்னைப் பல்கலைக்கழத்தில் இணைப்பு பெற்றுள்ள துறைகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 1 லட்சத்து 18 ஆயிரத்து 545 மாணவ மாணவியரும், சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்வி நிறுவனத்தின் மூலம் 22 ஆயிரத்து 186 மாணவ மாணவியர் மற்றும் நேரடியாக 931 பேர் என மொத்தம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 662 பேர் பட்டம் பெற்றனர்.