×

சென்னைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டம் பெற்றனர்

சென்னை: சென்னை பல்கலைக் கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக் கழக  வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் சென்னை பல்கலைக் கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராக பங்கேற்று விழாவில் உரையாற்றினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக் கழக இணை வேந்தருமான பொன்முடி வாழ்த்திப் பேசினார். முன்னதாக பல்கலைக் கழக துணை வேந்தர் கவுரி சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆண்டு அறிக்கை குறித்து பேசினார். இந்த பட்டமளிப்பு விழாவில் சென்னைப் பல்கலைக்கழத்தில் இணைப்பு பெற்றுள்ள துறைகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 1 லட்சத்து 18 ஆயிரத்து 545 மாணவ மாணவியரும், சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்வி நிறுவனத்தின் மூலம் 22 ஆயிரத்து 186 மாணவ மாணவியர் மற்றும் நேரடியாக 931 பேர் என மொத்தம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 662 பேர் பட்டம் பெற்றனர்.

நேற்று நேரடியாக பட்டம் பெற்றவர்களுள் டிஎஸ்சி 1, டிலிட் 3, பிஎச்டி 731, பரிசு பெறுவோர் 96, ரேங்க் பெற்றவர்கள் 100, பேர் அடங்குவார்கள். இவர்களில் சமீராபானு, ஆண்ட்ரோஸ், விஸ்வநாத், முகமது நபீஷா தஸ்லிம், ரேவதி ஆகிய 5 பேர் சென்னைப் பல்கலைக் கழக முதல் வகுப்பு மற்றும் மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்களாக அறிவிக்கப்பட்டனர். மேலும், நேற்று பட்டம் பெற்றவர்களில் தமிழகத்தில் பணியாற்றும்  ஐஏஎஸ் அதிகாரிகளும் அடங்குவார்கள். அதில் எம்.எஸ்.சண்முகம், மகேஸ்வரி, ஆனந்தகுமார் மற்றும் சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முனைவர் பட்டம் பெற்றனர். இவர்கள் தவிர உயர்கல்வித்துறை  செயலாளர் கார்த்திகேயனின் மனைவி லீலாவதி, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோரும் நேற்று பட்டம் பெற்றனர்.

Tags : IAS ,University of Chennai , Chennai University Graduation Ceremony IAS Officers Graduate
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு