ஈரோடு, திருப்பூர், கரூர், சேலத்தில் 2 நாள் ஸ்டிரைக் நூல் விலை உயர்வு கண்டித்து 18,850 ஜவுளி நிறுவனங்கள் மூடல்: ஒரே நாளில் ரூ.475 கோடி வர்த்தகம் பாதிப்பு

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மாவட்டத்தில் 18,850 ஜவுளி நிறுவனங்கள் நேற்று முதல் 2 நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.475 கோடியளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான விலையால், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 356 கிலோ கொண்ட ஒரு கண்டியின் விலை ரூ.76 ஆயிரமாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது பஞ்சின் விலை ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதே போல நூல் விலையும் உயர்ந்து வருகிறது. நூல் விலை உயர்வு காரணமாக விற்பனை மந்தநிலையில் உள்ளதால் நூற்பாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பஞ்சு நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும், பருத்தியை யூக வணிகத்திலிருந்து நீக்கி, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மே 16, 17 ஆகிய 2 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவதாக ஜவுளி மற்றும் பின்னலாடை துறையினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைமையில் ஜவுளி சந்தைகள், நூல் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட 25 சங்கங்கள் இந்த ஸ்டிரைக்கை நேற்று தொடங்கின. தவிர பிளீச்சிங், பிராசசிங், கேலண்டரிங் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் சென்னிமலை, பவானி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இது குறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் நிர்வாகி கலைச்செல்வன் கூறுகையில், இந்த ஸ்டிரைக்கால் நாளொன்றுக்கு ரூ.100 கோடி வரை உற்பத்தி மற்றும் விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது. பிளீச்சிங், பிராசசிங், கேலண்டரிங் உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை தொழிலில், நிட்டிங், ரைசிங், காம்பாக்டிங், டையிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரிங் என 55 தொழில் அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்திய பருத்தி கழகம், பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்யாததால் தொடர்பில்லாத நிறுவனங்களில் லட்சக்கணக்கான பேல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வால், திருப்பூரின் பின்னலாடை உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உள்பட 36 சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்தியுள்ளன. இப்போராட்டத்தால் நேற்று ஒரே நாளில் ரூ.175 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பல்லடம்: திருப்பூர் தொழில்துறையினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்லடம் மற்றும் சுற்று வட்டாரத்தல் 2.5 லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் காடா இல்லாத தறிகளின் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒரு நாளைக்கு ரூ.100 கோடி மதிப்பிலான 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கரூர்: கரூர் மாவட்டத்தில் சப்ளையர்ஸ் மற்றும் ஜாப் வொர்க் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் கரூரில் ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம், 80 அடி ரோடு, காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், ஜாப் வொர்க் தொழிற்சாலைகள் நேற்று மூடப்பட்டது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. இதன் மூலம் நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.100 கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை, குகை, தாதகாப்பட்டி, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, ஆட்டையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் 250 நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான நெசவு தறிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கியுள்ளனர். இதனால் தறிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

Related Stories: