வேலைநிறுத்தத்திற்கு மார்க்சிஸ்ட் ஆதரவு ஒன்றிய அரசாங்கத்தின் தவறான கொள்கையே காரணம்: மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை;  ஜவுளித் தொழிலை பாதுகாக்க நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு மார்க்சிஸ்ட் தனது முழு ஆதரவையும் அளிப்பதாக கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட்  வெளியிட்ட அறிக்கை;  தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஜவுளி சார்ந்த தொழில்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இந்த நெருக்கடிக்கு மோடி அரசாங்கத்தின் தவறான கொள்கையே காரணம். இந்திய பருத்தி கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கட்டுப்படியான விலையில் பருத்தியை கொள்முதல் செய்து, அதனை தொழில் துறையினருக்கு சரியான விலையில் வழங்கிட வேண்டும்.

ஆனால், 2021 ம் ஆண்டில், இந்திய பருத்தி கழகத்தின் வழியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று பாஜ ஒன்றிய அரசு தடுத்துவிட்டது. செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டுமெனவும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டுமெனவும் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். ஜவுளித் தொழிலை பாதுகாக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

Related Stories: