×

திருவலம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே பழுதான இரும்பு பாலம் சீரமைப்பு பணி தீவிரம்

திருவலம்: வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் திருவலம் பேரூராட்சியில் பொன்னையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் 84 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ‘’ராஜேந்திரா இரும்பு பாலம்’’ இந்திய வரலாற்றில் நினைவு சின்னமாக உள்ளது. பல்வேறு மொழி சினிமாக்களில் இடம்பெற்றுள்ளது இந்த பாலம். இப்பாலத்தின் கட்டுமான  பணிகள் மதராஸ் தாராப்பூர் இன்ஜினியரிங் என்கிற நிறுவத்தினரால் நடந்தது. பணிகள் துவங்கி 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு 1939ம் ஆண்டு போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அரை கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த பாலம் கட்ட 10 ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுமான பணியில் 1,200 தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். பாலங்களை இணைக்க 2 லட்சம் இரும்பு ஸ்குருக்கள் பயன்படுத்தியுள்ளனர். துருபிடிக்காதபடி தாராப்பூர் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் கட்டுமான பணிக்கு தேவையான இரும்பு பாலங்களின் உதிரிபாகங்கள் ராணிப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிறு தொழிற்கூடங்கள் அமைத்து கம்பிகள், ஸ்குருக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலத்தில் உள்ள 11 இணைப்பு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு கான்கீரிட் சிமெண்ட், ஜல்லி கலவைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரிசல்களுக்கு தார் கலவை பூசி தற்காலிக சீரமைப்பு செய்தனர்.

பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறையினர் விரிசல்களை சீரமைக்கும் பணிகளுக்காக தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதையடுத்து கடந்த மாதம் 27ம்தேதி பாலத்தில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு பகலாக சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பாலத்தில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அனைத்து வாகனங்களும் பொன்னை கூட்ரோடு பகுதியில் உள்ள பொன்னையாற்று புறவழிச்சாலை பாலம் வழியாக மாற்றப்பட்டது.  இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், ‘பாலம் சீரமைக்கும் பணியில்  8 இணைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் பாலத்தில் வழக்கம்போல் வாகன போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்றனர்.

Tags : Golden Nadad ,Tiruvavalam , Intensification of repair work on the dilapidated iron bridge across the Ponnayar near Tiruvalam
× RELATED காட்பாடி அருகே பொன்னையாற்றில்...