×

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரிய விலங்குகள் பறிமுதல்; பயணியிடம் விசாரணை

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்துக்கு நேற்றிரவு தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் அரிய வகை குரங்கு, முள்ளம்பன்றி கடத்தி வரப்பட்டிருந்தது. அந்த விலங்குகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். கடத்தி வந்த பயணியிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு ஒரு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அதில் அவர் அட்டைப்பெட்டி மற்றும் துணியால் செய்யப்பட்ட  கூடைக்குள் வெள்ளைநிற முள்ளம்பன்றி மற்றும் டாமரின் மங்கி எனும் அரிய வகை வெளிநாட்டு  குரங்கு குட்டியை வைத்திருந்தார். இதுகுறித்து அந்நபரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். மேலும், வெளிநாட்டிலிருந்து இதுபோன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது, அவர்கள் முறையாக சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு துறையில் தெரிவித்து, முறையான அனுமதி பெறவேண்டும். அந்த உயிரினங்களில் நோய்க்கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவரிடம் இந்த 2 அரியவகை உயிரினங்கள் எடுத்து வருவதற்கு முறையான ஆவணங்கள் எதுவுமில்லை எனத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, முள்ளம்பன்றி, குரங்கு குட்டியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, 2 அரிய வகை விலங்குகளை ஆய்வு செய்கின்றனர். பின்னர், முறையான மருத்துவ பரிசோதனை இல்லாமல் 2 விலங்குகளும் வந்துள்ளதால், அவற்றை மீண்டும் தாய்லாந்துக்கே திருப்பி அனுப்புவது என முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, அந்த 2 அரிய வகை உயிரினங்களை மீண்டும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிடிபட்ட நபரிடமும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Thailand , Confiscation of rare animals smuggled on a plane from Thailand; Passenger Inquiry
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...