'தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்' : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை: தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்று அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இத்தாலியின் வாடிகன் நகரில் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்  போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்கினார். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இது தொடர்பாக வீடியோவை தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் இத்தாலியில் ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து என்று பதிவிட்டு இருந்தார்.

அமைச்சரின் ட்விட்டரை பகிர்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்று பதிவிட்டிருந்தார். அத்துடன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான தமிழணங்கு ஓவியத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து இருந்தார்.இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கே என்ற தலைப்பில் எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்கிற வரிகளுடன் தமிழ் தாய் என்று ஒரு ஓவியத்தை பதிவிட்டார்.

இந்நிலையில் அண்ணாமலைக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.அதில் தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார். என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: