கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 19ம் தேதி வரை பலத்த மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் இன்று சாரல் மழை பெய்தது. கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை மே கடைசி வாரத்திலேயே தொடங்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கேரளா முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கொல்லம் உள்பட பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வரும் 19ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், கொல்லம் பத்தனம் திட்டா உள்பட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று கேரளா, லட்சத்தீவு மற்றும் கர்நாடக கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் மலையோர பகுதிகள், கடற்கரைகள் உள்பட சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று கேரள பேரிடர் தடுப்பு படை கேட்டு கொண்டுள்ளது. அதன்படி இன்று ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Related Stories: