அனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்று போட்டிகள் கடைசி வாரத்தை எட்டி உள்ளது. இதுவரை 63 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் குஜராத் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 2வது இடத்தில் உள்ள ராஜஸ்தானும் கிட்டத்தட்ட அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுவிட்டது. கடைசி போட்டியில் 20ம் தேதி சிஎஸ்கேவிடம் வெற்றிபெறாவிட்டாலும் குறைந்த ரன்ரேட்டில் தோற்றாலும் கூட போதும். 3வது இடத்தில் உள்ள லக்னோ, கொல்கத்தாவை வரும் 18ம் தேதி எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறாவிட்டாலும் படுதோல்வியை தவிர்த்தாலே அடுத்த சுற்று வாய்ப்பு உள்ளது. 4வது இடத்தில் உள்ள ஆர்சிபியின் ரன் ரேட் -0.323 ஆக உள்ளது. வரும் 19ம் தேதி கடைசி போட்டியில் வலுவான குஜராத்திடம் மெகா வெற்றி பெற வேண்டும்.

அப்படி வெற்றி பெற்றாலும் வாய்ப்பு சிறிய அளவில்தான் இருக்கும். டெல்லி, பஞ்சாப் அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். பஞ்சாப், டெல்லி தலா 6 வெற்றிகளை பெற்றுள்ளன. இன்று இரு அணிகளும் மோத உள்ளன. இதில் வெற்றிபெறும் அணி பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கும். தோற்கும் அணி வெளியேற வேண்டியதுதான். இதனால் வாழ்வா-சாவா நிலையில் இரு அணிகளும் இன்று களம் இறங்குகின்றன. இன்று டெல்லி வெற்றி பெற்றால் தனது கடைசி போட்டியில் மும்பையையும், பஞ்சாப் வென்றால் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஐதராபாத்தையும் வீழ்த்த வேண்டும். 6வது இடத்தில் உள்ள கொல்கத்தா கடைசி போட்டியில் லக்னோவை வென்றாலும் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து சிறிய வாய்ப்பு உள்ளது. இதனால் யார், யாரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு நுழைவது என்பது இடியாப்ப சிக்கலாக உள்ளது.

Related Stories: