புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட விவசாய பொருட்களை அறுவடை

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட விவசாய பொருட்களை அறுவடை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கைதிகளுக்கு யோகா, தியானம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட நுண்கலை பயிற்சியும், விளையாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளால் 3 ஏக்கரில் இயற்கை விவசாயப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. 60 வங்கியான பழங்கள், மூலிகை காய்கறிகள் என ஏராளமான செடிகள் நட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிக்க சிறை வளாகத்தில் ஆடு, மாடு மற்றும் முயல்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தநிலையில் கைதிகள் பயிரிட்ட செடிகளில் காய்கறிகள் நன்கு விளைந்துள்ளதால் அவற்றை அறுவடை செய்யும் விழா நடைபெற்றது. சிறைத்துறை செயலர் நெடுஞ்செழியன், தேசிய பாதுகாப்புக்குழு உறுப்பினர் வித்யா ராம்குமார், சிறை அதிகாரி சாமி வெற்றிச்செல்வன் ஆகியோர் அறுவடையை தொடங்கி வைத்தனர். கத்தரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, மாங்காய், எலுமிச்சை, பப்பாளி, பலா, கீரைகள் ஆகியவற்றுடன் மஞ்சள் சாமந்தி பூக்களும் அறுவடை செய்யப்பட்டன. அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை, சிறையில் உணவு தயாரிக்க பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். சிறையில் வேலை செய்யும் கைதிகளுக்கு, நாள் ஒன்றுக்கு 25 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் நிலையில், இன்று அறுவடை பணிக்கு 200 ரூபாய் ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.          

Related Stories: