×

எங்களிடம் தரமான பந்துவீச்சு வரிசை உள்ளது; கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த 63வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன் எடுத்தது. ஜெய்ஸ்வால் 41 (29 பந்து), படிக்கல் 39 (18 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) சஞ்சு சாம்சன் 32 ரன் அடித்தனர். லக்னோ பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய லக்னோ அணியில், டிகாக் 7, ராகுல் 10, படோனி 0, குர்னல் பாண்டியா 25, ஸ்டாய்னிஸ் 27 ரன்னில் வெளியேற அதிகபட்சமாக தீபக்கூடா 59 ரன் (39பந்து), அடித்தார். 20 ஓவரில் லக்னோ 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களே எடுத்தது.

இதனால் ராஜஸ்தான் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 9 பந்தில் 17 ரன் அடித்ததுடன் 2 விக்கெட் எடுத்த போல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். 13வது போட்டியில் 8வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான் 2வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் வாய்ப்பை மேலும் வலுப்படுத்திக்கொண்டது. லக்னோ 5வது தோல்வியை சந்தித்தது. வெற்றிக்கு பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், இந்த வெற்றி திருப்திகரமாக இருந்தது. நாங்கள் சில நல்ல முடிவுகளை எடுத்து வருகிறோம். அவை எங்கள் வழியில் செல்லாதபோது கூலான சூழ்நிலையை பராமரிப்பது மிகவும் கடினம்.

முதலில் பேட்டிங் செய்வது எங்கள் அணுகுமுறைக்கு மிகவும் பொருத்தமானது. எங்களிடம் தரமான பந்துவீச்சு வரிசை உள்ளது. அஸ்வின் கடைசி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டார்.  அஸ்வின், சஹால் என தரமான ஸ்பின்னர்களைக் கொண்டிருப்பது எங்களுக்கு போனஸ். நீங்கள் அவர்களை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நான் நிறைய தமிழ் பேசுவேன், நண்பர்களிடம் பேசுவேன், திரைப்படம் பார்ப்பேன், என்றார். லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், இது சேசிங் இலக்கு தான். ஒரு நல்ல பிட்ச். பந்து பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருந்தது. பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டோர், பேட்டிங்கில் கூட்டாக செயல்படவில்லை, என்றார்.

Tags : Sanju Samson , We have a quality bowling line-up; Interview with Captain Sanju Samson
× RELATED வெற்றியை தொடருமா ராஜஸ்தான்? குஜராத்துடன் இன்று மோதல்