திருமயம் அருகே ராங்கியத்தில் கோயில் திருவிழா மஞ்சுவிரட்டு போட்டியில் 5 பேர் காயம்

திருமயம் : திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 5 பேர் காயமடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் அழகு நாச்சியார் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நேற்று ராங்கியம் பெரிய கண்மாயில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி, மதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், கோனாபட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

முதலில் மஞ்சுவிரட்டு திடலில் உள்ளூர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டன. ஒரு கட்டத்தில் மாட்டின் உரிமையாளர்கள் கொண்டுவந்திருந்த காளைகளை மஞ்சுவிரட்டு திடலில் ஆங்காங்கே அவிழ்த்துவிட்டனர். இதனால் கூட்டத்தை கண்டு மிரண்டு ஓடிய காளைகள் முட்டியதில் 5 பேர் லேசான காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இந்நிகழ்ச்சியை காண ராங்கியம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான கிராம மக்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராங்கியம் ஊரார்கள் செய்திருந்தனர். பனையப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: