ராஜபாளையத்தில் குப்பைக்கு தீ வைப்பதால் சுகாதாரக்கேடு-தடுக்க மக்கள் கோரிக்கை

ராஜபாளையம் : ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீரோடைகளில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி தீ வைப்பதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களை கொண்டு குப்பைகளை தினசரி குடியிருப்பு பகுதிகளில் இருந்து பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பலரும் இதை பொருட்படுத்தாமல் அருகில் செல்லக்கூடிய நீரோடைகளில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகள் அதிகமாக சேரும்போது ஒரு சிலர் அதில் தீ மூட்டி விட்டு செல்கின்றனர். இதனால் குடியிருப்பு பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டு மூச்சு திணறல் மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை நகராட்சி சார்பில் வைத்து பராமரிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மக்கள் கூறுகையில், ராஜபாளையத்தில் குப்பைகளை ஓடைகளில் கொட்டுவதால் நீர்வரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது. இதுபோக குப்பைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்துவிடுகின்றனர். இதனால் புகைமண்டலம் ஏற்பட்டு மூச்சுதிணறுகிறது. மக்கள் காசநோய் போன்றவற்றுக்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இதனை தடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: