×

எமரால்டு பகுதியில் கட்டப்பட்ட மருத்துவமனை விரைவில் திறக்கப்படும்-மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்

ஊட்டி :  ஊட்டியில் ரூ.461 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிட கட்டுமான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தொற்றும் மற்றும் தொற்றா நோய்களை கட்டுபடுத்த தமிழக முதல்வர் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று தற்ேபாது 100க்கு கீழாக உள்ளது. 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. 8 முதல் 9 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 10க்கும் குறைவாக உள்ளது. சென்னையில் சுமார் 20 பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.

தொற்றா நோய்கள் கட்டுப்படுத்துவதற்கு மக்களை தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன. சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில் ரூ.3600 கோடி மதிப்பில் 136 அறிவிப்புகள் 17 தலைப்பில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். 110 விதியின் கீழ் 708 புதிய நகர் நல்வாழ்வு மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். 11 மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனை மேம்பாட்டு பணிகளை துரிதபடுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். 1650 மாணவர்கள் முதலாமாண்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கை நடைபெற்று உள்ளது. நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் ஆய்வு செய்து அத்தியவாசிய தேவை என்னவென்றும், விடுதி கட்டுமான பணிகள், கல்லூரிக்கு வரும் பாதை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு பணிகளை விரைவுபடுத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மாணவர்கள் இங்கு உள்ள மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பு படிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்கல்லூரி இந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு ஒரு மைல்கல்லாக விளங்கும் எமரால்டு பகுதியில் கட்டப்பட்ட மருத்துவமனையும் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் இதுவரை 10.22 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் உள்ளனர். இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்களப்பணியாளர்கள், மருத்துவப்பணியாளர்கள் ஆகியோர் 50 சதவீதம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 93.51 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள்.

2ம் தவணை 83 சதவீத நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 1.29 கோடி நபர்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. சுமார் 40 முதல் 45 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தி கொள்ளாமல் உள்ளார்கள். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது. அதே போல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளும் இருந்து உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் தேயிலை தொழிலாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக திகழ்கிறது. தமிழகத்தில் அனைத்தும் நோய்களும் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளும் வகையில் உணவினை உட்கொள்ள வேண்டும். சூடுத்தண்ணீர் மற்றும் நன்கு சமைத்த உணவினை உட்கொள்ள வேண்டும், என்றார்.


ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அம்ரித், நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Emerald ,Secretary of Public Welfare , Ooty: Medical and public works on the Rs 461 crore Nilgiri Government Medical College Hospital building in Ooty.
× RELATED மூலிகை வேளாண் தொழில் நுட்பங்களை...