×

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட ₹32 லட்சம் மதிப்பு டூவீலர் உதிரி பாகங்களுடன் மினிலாரியை கடத்திய வாலிபர் அதிரடி கைது-வாணியம்பாடியை சேர்ந்தவர்

திருப்பத்தூர் : சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட ₹32 லட்சம் மதிப்பு டூவீலர் உதிரி பாகங்களுடன் மினிலாரியை கடத்தி சென்ற வாணியம்பாடியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். ஒரே நாளில் குற்றவாளியை மடக்கி பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.சென்னை துறைமுகம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். டூவீலர் உதிரி பாகம் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ₹32 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்களை நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு மினிலாரியில் அனுப்பி வைத்தார். மினிலாரியை சென்னையை சேர்ந்த அருள்(35) என்பவர் ஓட்டிச்சென்றார்.

இதைத்தொடர்ந்து, நள்ளிரவு 1 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே மினிலாரி சென்றது. அப்போது, டிரைவர் அருள் இயற்கை உபாதை கழிப்பதற்காக மினிலாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றார்.சிறிது நேரம் கழித்துவந்து பார்த்தபோது மினிலாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அருள், அக்கம்பக்கம் தேடி பார்த்தார். ஆனால், எந்த தகவலும் இல்லை. மர்ம ஆசாமிகள் யாரோ மினிலாரியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து டிரைவர் அருள் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் நேற்று அதிகாலை புகார் செய்தார். அதன்பேரில், டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மினிலாரியை மர்ம நபர்கள் சுங்கச்சாவடி வழியாக கடத்தி சென்றிருந்தால், அந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும். இதனால் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ேபாலீசார் ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில்  டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன், தாலுகா இன்ஸ்பெக்டர் அருண், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் வாணியம்பாடி கணவாய்புதூர் அருகே, கடத்தப்பட்ட மினிலாரி சாலையோரம் நின்றிருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அப்போது, லாரியின் அருகே நின்றிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், வாணியம்பாடி கணவாய்புதூர்  பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(35) என்பதும், லாரியை கடத்தி வந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் மினிலாரியை பொருட்களுடன் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்து செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த திருட்டு சம்பவத்தில், குற்றவாளியை ஒரே நாளில் கைது செய்த வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசாருக்கு, எஸ்பி பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

Tags : Chennai ,Bangalore ,Volliber Action Kaithu-Vainiyambadi , Tirupati: Two-wheeler worth ₹ 32 lakh smuggled from Chennai to Bangalore
× RELATED பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தம்!