குலசேகரன்பட்டினத்தில் குடோனுக்கு தீவைப்பு ரூ.9 லட்சம் கருப்புகட்டி, கற்கண்டு எரிந்து நாசம்-மாடு, கோழிகள் தீக்கிரை; மர்ம நபர்களுக்கு வலை

உடன்குடி : குலசேகரன்பட்டினத்தில் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கருப்புகட்டி குடோனுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் ரூ.9 லட்சம் மதிப்பிலான கருப்புகட்டி, பனங்கற்கண்டு எரிந்து நாசமானதுடன், பசுங்கன்று, கோழிகளும், கூரை செட்களும் தீக்கிரையாயின.குலசேகரன்பட்டினம் காவடிபிறை தெருவைச் சேர்ந்தவர் ராமசுப்பு (63) குடும்பத்துடன் வசித்து வருகிறார். பனைத்தொழில் செய்து வரும் இவரது கடைசி மகன் கார்த்திக், வீட்டின் அருகே பனங்கற்கண்டு தயார் செய்து வருகிறார். மேலும் குலசேகரன்பட்டினம் கடற்கரைக்கும் செல்லும் வழியில் உள்ள தங்களது தோட்டத்தில் ஷெட் அமைத்து  பனங்கற்கண்டு, கருப்புகட்டி தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். தயாரிக்கப்பட்ட கருப்புகட்டி, பனங்கற்கண்டை வைத்திருக்கும் குடோனாகவும் பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமசுப்பு தனது தோட்டத்தில் தங்கியிருந்தார். அப்போது காவடிபிறை தெருவிலுள்ள வீட்டின் முன்பு தீப்பிடித்து எரிவதாக மகன் கார்த்திக் தெரிவித்துள்ளனர். உடனே ராமசுப்பு அங்கு சென்று குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.

சிறிது நேரத்தில் தோட்டத்தில் உள்ள கருப்பட்டி தயாரிக்கும் கூடத்திற்கும் மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் கூரையில் வேயப்பட்ட ஓலைகள் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதுகுறித்து அருகிலுள்ள தோட்டக்காரர்கள் ராமசுப்பு, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

இதில் தோட்டத்தில் வைத்திருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பனங்கற்கண்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான கருப்புகட்டி, ரூ.1 லட்சம் மதிப்பிலான கூப்பைனி, பசுங்கன்று, கோழிகள், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஓலை மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கொட்டகை உள்ளிட்டவைகள் எரிந்து நாசமானது. இதன் மொத்த மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இதுகுறித்து ராமசுப்பு அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: