மாவட்டம் முழுவதும் கனமழை ஏற்காடு மலைப்பாதை மண்சரிவு 4 மணி நேரத்தில் சீரமைப்பு-கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

சேலம் : ஏற்காட்டில் ஏற்பட்ட மலைப்பாதை மண்சரிவு 4 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.  அப்பகுதியை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்திலும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சேலத்தில் பெய்த மழையால், வாகன ஓட்டிகள் பரிதவித்தனர். இந்நிலையில் அன்றிரவு ஏற்காட்டில் பெய்த மழையால், சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான மலைப்பாதையில் 40 அடி பாலம்  அருகே திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

மழைநீரில் அடித்து வரப்பட்ட மண் மற்றும் கற்கள் சாலையில் குவிந்தது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சேலம் மற்றும் ஏற்காடு தீயணைப்பு நிலைய வீரர்கள், காவல் துறையினர், வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், இயந்திரங்களின் உதவியுடன், சுமார் 4 மணிநேரத்தில் சாலையில் கிடந்த மண் மற்றும் கற்களை அகற்றி சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் வழக்கம் போல போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

 இதனிடையே, மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், கலெக்டர் கார்மேகம் ேநற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மண்சரிவு குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், ஏற்காடு மலைப்பாதை முழுவதும் நிரந்தரமாக மண்சரிவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதித்தார்.  நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாய்க்கன்பாளையத்தில் 34 மில்லி மீட்டர் மழை பெய்தது.  மேலும், கெங்கவல்லி 32 மிமீ, சேலம் 27.1 மிமீ, ஏற்காடு 24 மிமீ என மாவட்டம்  முழுவதும் 163.1 மிமீ மழை பதிவானது. கத்திரி வெயில் காலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அறிவித்தபடி கோடைவிழா; கலெக்டர் பேட்டி

ஏற்காட்டில் ஏற்பட்ட மண்சரிவு பகுதிகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். பின்னர் ஏற்காடு படகு இல்லம், அண்ணாபூங்கா மற்றும் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டு, அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அப்போது, கலெக்டர் கார்மேகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு இரவோடு, இரவாக சரிசெய்யப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மலைப்பாதையில் பொதுமக்கள் மிக கவனமாக பயணிக்க வேண்டும். இரவில் தொடர் மழை இருந்தால், பாதை மூட வேண்டியிருக்கும். பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள், குடிநீர் பாட்டில்களை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே அறிவித்தபடி கோடைவிழா நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகளில் அனைத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்,’ என்றார்.

Related Stories: