திருவண்ணாமலையில் கொட்டும் மழையிலும் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்-அண்ணாமலையார் கோயிலிலும் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கொட்டும் மழையிலும் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று பவுர்ணமி கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.நினைக்க முக்தி தரும் அக்னி திருத்தலம் அமைந்த திருவண்ணாமலையில், இறைவன் திருவடிவாக தீபமலை அமைந்திருக்கிறது. எனவே, மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம்.

ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த தீபத்திருவிழாவின்போது, குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, கடந்த பங்குனி மாதமும், கடந்த மாதம் சித்ரா பவுர்ணமியின்போதும் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது.

அதையொட்டி, கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று மதியம் 12.19 மணிக்கு தொடங்கி, இன்று காலை 10.22 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கும், அம்மனுக்கும் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.மேலும், அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே, பகலில் நடை அடைப்பு இல்லாமல் தொடர்ந்து இரவு 11 மணிவரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால், கோயில் வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. கோடைகாலம் என்பதால், வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு கோயில் பிரகாரத்தில் மோர் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலையில் இருந்து கிரிவல பக்தர்களின் எண்ணிக்ைக படிப்படியாக உயர்ந்தது. நேற்று இரவு விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தொலைவும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சன்னதிகளை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

நேற்று பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை 3 மணிக்கு பிறகு வெயிலின் தாக்கம் வெகுவாக தணிந்து, மழை மேகம் சூழ்ந்து இதமான நிலை ஏற்பட்டது. எனவே, கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு தகுந்த சூழ்நிலை அமைந்திருந்தது. நேற்று இரவு 7 மணியளவில் பரவலான மழை பெய்தது. ஆனாலும், மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.

கிரிவல பக்தர்களுக்கு, பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. கோடைகால விடுமுறை என்பதால், வழக்கத்தைவிட நேற்று பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. அதையொட்டி, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Related Stories: