திண்டுக்கல் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் 2 கிராம இளைஞர்களிடையே மோதல்: பைக்குகள் தீ வைத்து எரிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இரு கிராம இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில், கடைகள் சூறையாடப்பட்டு, பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி மற்றும் காந்தி நகர் காலனியை சேர்ந்த இளைஞர்கள் அங்குள்ள கோயில் அருகே தனித்தனியாக மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து செட்டிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முகத்தை மூடிக்கொண்டு, 5-க்கும் மேற்பட்ட பைக்குகளில் வந்து மீன் கடை, பலசரக்குக் கடைகளை அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள், செட்டிநாயக்கன்பட்டி இளைஞர்களை மறித்து, 2 பைக்குகளை கைப்பற்றி தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பதற்றம் அதிகரித்துள்ளதால், திண்டுக்கல் சரக டிஐஜி ருபேஷ் குமார் மீனா ஆய்வு செய்தார்.

Related Stories: