×

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை..!!

சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டிற்கு பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி போராடி வரும் திருப்பூர் பகுதி விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக கவனித்து, நிறைவேற்றி தர வேண்டும். இந்தியாவின் பொருளாதாரத்தோடு தொடர்புடைய இப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுமென்று தொடர்ச்சியாக எழுந்து வரும் குரல்களை ஒன்றிய அரசு புறந்தள்ளுவது நல்லதல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல் நூல் விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2020-2021-ம் நிதியாண்டு துவக்கத்தில் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பஞ்சு தற்போது ஒரு லட்சம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 162 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இறுதியில், ஜவுளித்தொழில் சந்தித்து வருகின்ற பிரச்சினைகளுக்கு காரணங்களாக ஆயத்த ஆடைகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட இருப்பதையும் இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான 11 சதவீத வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டன.

இந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் அறிக்கைகள் விடுத்ததோடு மட்டுமல்லாமல், ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தேன். இந்த சூழ்நிலையில், நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் பெரும் சரிவை சந்தித்து வருவதாகவும், உற்பத்தி செலவு அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து இழப்பினை சந்தித்து வருவதாகவும், தொடர்ந்து உற்பத்தி செய்ய இயலாத நிலையில், நூல் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இன்று மற்றும் நாளை வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ஒன்றிய அரசு வரியை குறைத்தும், நூலின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது வியப்பாக உள்ளது. எனவே முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தேவைப்பட்டால் மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்து, நூல் விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Union Government ,DTV Dinakaran ,O. Panneerselvam , Thread Price, Union Government, DTV Dinakaran, O. Panneerselvam
× RELATED கோடை வெப்பத்தையொட்டி குடிநீர்,...