சென்னை நீலங்கரையில் உடல்நலக்குறைவால் இறந்த தாயின் உடலை ட்ரமில் போட்டு மூடிய மகன்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை நீலங்கரையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 86 வயதான தாயின் உடலை அவரது மகனே ட்ரமில் போட்டு சிமெண்ட் மூலம் பூசி மூடியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் 86 வயதான மூதாட்டி செண்பகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் அதே வீட்டின் மேல்தளத்தில், செண்பகத்தினுடைய 2-வது மகன் சுரேஷ் என்பவரும் வசித்து வருகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் இவருடைய மூத்த மகன், கடந்த 4,5 நாட்களாக தன்னுடைய தாயாரை தொலைபேசியில் அணுகியபோது, அவர் கடைக்கு சென்றிருப்பதாகவும், உறங்கிகொண்டிருப்பதாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சுரேஷின் அண்ணன், நேரடியாக வீட்டிற்கு சென்று, சுரேஷிடம் விசாரித்துள்ளார். இதில் பயந்துபோன சுரேஷ், தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாகவும், தன்னிடம் காசு இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாத மனக்குழப்பதால், இறந்த தாயாரை ட்ரம்மில் போட்டு, சிமெண்ட் பூசி மூடிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷின் அண்ணன், உடனே நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரி அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ட்ரம்முடன்  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதபரிசோதனைக்கு பிறகே, செண்பகம் உடல்நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.               

Related Stories: