×

நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!!

புதுடெல்லி: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி, புத்த பூர்ணிமாவையொட்டி இன்று ஒரு நாள் அரசுமுறை பயணமாக நேபாளம் சென்றுள்ளார். 2014ம் ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் மோடி மேற்கொள்ளும் ஐந்தாவது நேபாள பயணம் இதுவாகும். புத்தரின் பிறப்பு, ஞயாணோதயம், புத்தரின் இறப்பு ஆகிய மூன்றுமே மே மாதம் பவுர்ணமி நாளில் புத்த பூர்ணிமாவாக பெளத்தர்களால் கொண்டாடப்படுகிறது. இன்று கொண்டாடப்படும் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புத்தர் பிறந்த இடத்தில் தரிசனம் செய்வதற்காக நேபாளம் சென்ற பிரதமர் மோடியை  நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

பின்னர் இருவரும் லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் தரிசனம் செய்தனர். நேபாள அரசின் கீழ் உள்ள லும்பினி வளர்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.தொடர்ந்து புத்த துறவிகள் மடத்தில் புத்த கலாச்சார பாரம்பரிய மைய அடிக்கல் நாட்டு விழாவில் மோடி பங்கேற்கிறார். இதையடுத்து நேபாள பிரதமருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கல்வி, கலாச்சாரம் உறவை வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகள் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.  நேபாளத்துக்கு மோடி செல்வதை முன்னிட்டு, இந்திய- நேபாள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உபி போலீசாரும், சகஸ்திர சீமாபல் படைப் பிரிவினரும் எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : PM Modi ,Nepal ,Mayadevi Temple ,Buddhas ,Lumbini , Nepal, Prime Minister Modi, Lumbini, Buddha, Mayadevi Temple, Worship
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...