பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு கிருஷ்ணா நீர் திறப்பு: நீர்வரத்து 540 கனஅடியிலிருந்து 610 கனஅடியாக அதிகரிப்பு

திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து 540 கனஅடியிலிருந்து 610 கனஅடியாக அதிகரித்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு, ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீரானது, ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு வந்தடைந்து, பின்பு பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு சென்றது. நேற்றைய தினம் நீர்வரத்தானது 540 கனஅடியாக வந்து கொண்டிருந்த நிலையில், தற்பொழுது 610 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று பெய்த கனமழையின் காரணமாகவும், கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாகாவும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் முழுகொள்ளளவான 3,731 மில்லியன் கனஅடியில், தற்பொழுது 1,766 மில்லியன் கனஅடி நீர் இருப்பானது இருந்து வருகிறது. இதன் மொத்த அடியான 35 அடி உயரத்தில், தற்பொழுது 27.64 அடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, புழல் மற்றும் செம்பரம்பாக்கத்திற்கு 600 கனஅடி வீதமாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை, திருவள்ளூரில் 8 செ.மீ. மழையும், ஊத்துக்கோட்டை, பூண்டியில் தலா 2 செ.மீ. மழையும்  பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக இன்றும் மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா அரசு திறந்துள்ள கிருஷ்ணா நதிநீர் 1500 கனஅடியில், தற்போது பூண்டி, ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கான நீர்வரத்து அதிகரித்து கொண்டுள்ளது.                   

Related Stories: