இலங்கை அதிபர் கோத்தபயவுக்கு எதிராக தொடரும் போராட்டத்திற்கு பிரதமர் ரணில் ஆதரவு!: மாற்றம் ஏற்பட மக்கள் போராட்டம் அவசியம் என கருத்து..!!

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு இடைக்கால பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி காலே முகத்திடலில் ஒரு மாதத்திற்கும் மேல் மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. இதையடுத்து கடந்த 9ம் தேதி போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் கொழும்பு முழுவதும் வன்முறை பரவியது. தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

4வது முறையாக இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார். இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி காலேவில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, காலே போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் முறையில் மாற்றத்தை கொண்டுவர மக்களின் போராட்டம் நீடிக்க வேண்டும் என்றும் நாட்டை தலைமை தாங்கும் பொறுப்புகளை இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளட்டும் என்றும் ரணில் கூறினார்.

போராட்டக்காரர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்த இலங்கை பிரதமர், நாட்டின் எதிர்கால கொள்கைகளை வடிவமைப்பதில் அவர்களது கருத்துக்கள் கேட்கப்படும் என்றார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நலன்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Related Stories: