×

தாமஸ் கோப்பை பேட்மின்டன் முதல் முறையாக இந்தியா சாம்பியன்: பைனலில் இந்தோனேசியாவை வீழ்த்தி சாதனை

பாங்காக்: தாமஸ் கோப்பை பேட்மின்டன் தொடரில் இந்திய ஆண்கள் அணி, 73 ஆண்டுகளில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்தது. பரபரப்பான இறுதிப் போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை நேற்று எதிர்கொண்டது இந்தியா. முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் லக்‌ஷியா சென் 8-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் அந்தோனி ஜின்டிங்கை வீழ்த்தி 1-0 என முன்னிலை கொடுத்தார். அடுத்து நடந்த இரட்டையர் ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை 18-21, 23-21, 21-19 என்ற செட் கணக்கில் முகமது ஆசன் - கெவின் சஞ்ஜெயா சுகமுல்ஜோ ஜோடியை வீழ்த்த, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் ஜொனாதன் கிறிஸ்டியுடன் மோதிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 23-21 என்ற நேர் செட்களில் வீழ்த்த, இந்தியா 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று 73 ஆண்டுகளில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை முத்தமிட்டு வரலாற்று சாதனை படைத்தது. இந்த வெற்றியை இந்திய வீரர்கள் மற்றும் குழுவினர் தேசியக் கொடி ஏந்தி, மைதானத்தை உற்சாகமாகச் சுற்றி வந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

* ரூ.1 கோடி ரொக்கப் பரிசு
தாமஸ் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்திய அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.

* முதல்வர் வாழ்த்து
தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தி: 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி முதன்முறையாக இந்திய அணி தாமஸ் கோப்பையை வென்றுள்ளது. இந்திய விளையாட்டுத் துறைக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிகு நாள். இந்தியா இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிகு வெற்றியைப் பதிவுசெய்ய உதவிய வீரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய அணிக்கு பிரதமர் மோடி, கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின், லஷ்மண், விராத் கோஹ்லி, கம்பீர், கால்பந்து அணி கேப்டன் சுனில் செட்ரி, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் உள்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Tags : Thomas Cup ,Indonesia , Thomas Cup Badminton First Time India Champion: Record beating Indonesia in Final
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!