×

தமிழகத்தில் வெப்ப சலனம் நீடிப்பு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான அசானி புயலுக்கு பிறகு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. கத்திரி வெயில் காலத்தில் புயல் காரணமாக பெய்த மழையால் வெப்பம் குறைந்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது. இதற்கிடையே சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் நேற்று 100 மி.மீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூரில் 80 மி.மீ, ஆரணி, பரூர், திருமானூரில் 70 மி.மீ, சிவலோகம், பேச்சிப்பாறை, ஒக்கனேக்கல், மாரண்டஹள்ளி, இடையப்பட்டி, புள்ளம்பாடி, நாட்றாம்பள்ளியில் 60 மி.மீ, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம் நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

இதன் தொடர்ச்சியாக தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். மேலும்,  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய  மாவட்டங்கள், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதே நிலை 19ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

Tags : Tamil Nadu , Prolonged heat wave in Tamil Nadu Heavy rains in 9 districts: Meteorological Center Information
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...