×

சென்னை குடிநீர் தேவைக்காக ரூ.22 ஆயிரம் கோடியில் திட்டம்: நீர்வளத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.22 ஆயிரம் கோடியில் 20.50 டிஎம்சி கூடுதலாக சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 13.50 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகள் மூலம் மாநகரின் குடிநீர் தேவை ஆண்டு முழுவதும் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால், சென்னை மக்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 22 டிஎம்சி தண்ணீர் ேதவைப்படுகிறது. அதே நேரத்தில் வரும் 2035ம் ஆண்டுக்குள் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கேற்ப இத்தேவை 32 டிஎம்சி ஆக அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. எனவே, மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தாலும், அந்த தண்ணீரை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு இல்லாததால், வீணாக கடலில் கலக்கிறது. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், சென்னை நகர நீர் வழங்கல் அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கும் வெள்ளத்தை தணிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை தடுத்தல் மற்றும் மழைநீரை பாதுகாத்து நீர் பற்றாக்குறையுள்ள ஆண்டுகளில் அந்த நீரை பயன்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம். எனவே, தற்போதுள்ள நீர் நிலைகளின் சேமிப்பு திறனை அதிகரித்தல், நீர் கடத்தும் திறனை மேம்படுத்துதல் மற்றும் சாத்தியமான நீர்நிலைகளை இணைப்பதன் மூலம் சென்னை நகரில் மழைநீர் சேமிப்பு திறனை மேம்படுத்தப்படுகிறது.

அதன்படி புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்க அவற்றை ஆழப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று, பாலாறு, கொசஸ்தலையாறு, கூவம் ஆற்றில் புதிதாக 3 இடங்களில் கதவணை மற்றும் 9 இடங்களில் தடுப்பணை அமைப்பது, பாசனத்துக்கு பயன்படுத்தாத 120 ஏரிகளை தூர்வாரி, கொள்ளளவை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மேற்கண்ட நீர்நிலைகளில் 20.50 டிஎம்சி வரை கூடுதல் சேமித்து வைக்க முடியும். மேலும், இந்த திட்டத்தில் மழை காலங்களில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும். இந்த திட்டத்துக்கான உத்தேச மதிப்பீடு ரூ.22,004 கோடி ஆகும். இந்த நிதியை பெறும் வகையில் நீர்வளத்துறை முயற்சிகள் எடுத்து வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Chennai ,Water Resources Department , Rs 22,000 crore project for Chennai drinking water needs: Information by a senior official of the Water Resources Department
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...