×

இந்தியாவின் முதல் பொதுநிலை அருளாளர் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்: வாடிகனில் போப் பிரான்சிஸ் வழங்கினார்

நாகர்கோவில்: மறை சாட்சியாக விளங்கிய தமிழகத்தின் முதல் புனிதர், இந்தியாவில்  முதல் பொதுநிலையினரான புனிதர் அருளாளர் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை  வாடிகனில் நடைபெற்ற பிராமண்ட நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் நேற்று  வழங்கினார். குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே நட்டாலம் கிராமத்தில் 1712ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பிறந்தவர் நீலகண்டன் என்ற இயற்பெயரை கொண்ட தேவசகாயம். 1741ல் திருவிதாங்கூர் படைகளுக்கும், டச்சு  படைகளுக்கும் இடையே நடைபெற்ற குளச்சல் போரில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிடம்  டச்சுப் படைத் தளபதி பெனடிக்ட் டிலனாய் போர் கைதியானார். அவருடன் நீலகண்டன்  பழகினார். நண்பராகி அவருடன் உரையாடியதில் இருந்து கிறிஸ்தவத்தை பற்றி அறிந்து கிறிஸ்தவத்தை தழுவ தொடங்கினார்.

1745ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலயத்தில் திருமுழுக்கு பெற்றார்.  ‘‘லாசர்’’ என்ற விவிலிய பெயருடன் தமிழில் ‘‘தேவசகாயம்’’ என்று அழைக்கப்பட்டார். மனைவி பார்கவியும் திருமுழுக்கு பெற்று ‘‘தெரேஸ்’’ என்றும் தமிழில் ‘‘ஞானப்பூ’’ என்றும் அழைக்கப்பட்டார். அப்போது படை வீரர்களும் பலர் மனம் மாறினர். இதையடுத்து, உயர் குலத்தாரை புறக்கணித்தார் என்றும், மன்னரை அவமதித்து விட்டார் என்றும் அவரது கிறிஸ்தவ விசுவாசத்திற்காக 1752ம் ஆண்டு  ஜனவரி 14ம் தேதி மன்னரின் கட்டளைப்படி ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் தேவசகாயம் சுட்டு கொல்லப்பட்டார். அவரின் உடல் பகுதிகள் சேகரிக்கப்பட்டு கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் பீடத்திற்கு முன்பு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேவசகாயத்திற்கு 22-12-2003 அன்று இறையூழியர் பட்டம்  வழங்கப்பட்டது. 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் நாள், தேவசகாயம்  ‘‘மறை  சாட்சி’’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ‘‘முக்திப்பேறு பெற்றவர்’’ (அருளாளர்) என்னும் பட்டமும் அளிக்கப்பட்டது. கடந்த 28-2-2019-ல் இவரை புனிதராக அறிவிக்கும் ஆவணத்தில் போப் பிரான்சிஸ் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து அருளாளர் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 1.30 மணிக்கு திருப்பலி நிகழ்வுகள் தொடங்கின. 10 வேண்டுகையாளர்களுடன் புனித பேராய தலைவர் கர்தினால் மர்சிலோ செமரரோ போப் பிரான்சிஸிடம் சென்று அருளாளர்கள் தேவசகாயம் உட்பட 10 பேரை புனிதர்களாக உயர்த்துமாறு பரிந்துரைத்தார். அவர்களுடன் வேண்டுகையாளர்களும் சென்றனர். தேவசகாயம் சார்பில் வேண்டுகையாளர் அருள்பணி எல்பின்ஸ்டன் ஜோசப் உடனிருந்தார். கர்தினால் செமரரோ 10 அருளாளர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக வாசித்தார். தொடர்ந்து போப் பிரான்சிஸ் தேவசகாயம் உட்பட 10 அருளாளர்களையும் புனிதர்களாக அறிவித்தார்.

தொடர்ந்து அங்குள்ள பலி பீடத்தின் முன்பு வைக்கப்பட்ட புதிய புனிதர்களின் திருப்பொருட்களின் முன்னால் வைப்பதற்கு 10 பேர் நறுமணத்தை எடுத்து சென்றனர். புனிதர் தேவசகாயம் திருப்பொருளின் முன்பு வைப்பதற்காக அமலமேரி புதல்வியர் சபையின் தலைவர் அருள் சகோதரி லலிதா எடுத்து சென்று வைத்தார். புனிதர்களாக உயர்த்தப்பட்டவர்களுக்காக ஜெபம் நடைபெற்றது. மறை சாட்சியாக விளங்கிய தமிழகத்தின் முதல் புனிதர், இந்தியாவில் முதல் பொதுநிலையினரான புனிதர் அருளாளர் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை வாடிகன் வழங்கி இருப்பது பெரும் பெருமையை சேர்த்துள்ளது.  

கோட்டார் பிஷப் நசரேன் சூசை  உள்ளிட்டோரையும் போப் பிரான்சிஸ் நேரில் சந்தித்து ஆசி வழங்கினார். புனிதர் பட்டம் வழங்குவதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. போப் பிரான்சிஸ் மறையுரையை இத்தாலிய மொழியில் வழங்கினார். அப்போது அவர், ‘புனித தன்மை என்பது, புனிதராக வாழ்வது என்பது ஒருவர் தனது வாழ்வையே வழங்குவதாகும். திருமணமானவரா நீங்கள்,  கிறிஸ்து திரு அவைக்கு ஆற்றியது போல உங்கள் கணவர் அல்லது மனைவியை அன்பு காட்டி புனிதராக இருங்கள். வாழ்வதற்கு வேலை செய்பவராக நீங்கள் உங்கள் சகோதர சகோதரிக்கு சேவை செய்வதில் புனிதராக இருங்கள் ,’ என பேசினார்.

* வாடிகனில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து
வாடிகன்  நகரில் புனிதர் பட்டம் வழங்குவதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் பெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

* சமூக நீதிக்கு தியாகம் செய்த தேவசகாயம்
வாட்டிகனில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், ‘தமிழகத்தில் இருந்து ஒருவர், திருமணமானவர் இப்படிப்பட்ட உன்னத புனிதர் நிலையை அடையும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய அங்கீகாரம். சமூக நீதிக்காக தியாகம் செய்தவர் தேவசகாயம்,’  என்றார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ‘தேவசகாயத்தின் மரணத்திற்கு காரணம் ஜாதி என்கிற அழுக்குதான்.  சமூக  நீதிக்கான போராட்டத்தை தொடங்கி வைத்தது,’’ என்றார்.


Tags : India ,First General Bishop ,Pope Francis ,Vatican , Canonization of India's First General Bishop: Consecrated by Pope Francis at the Vatican
× RELATED போப் உடல்நிலை பாதிப்பு