×

வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில் சுட்டெரிக்கிறது

புதுடெல்லி: வட மாநிலங்களில் வெயில் அதிகமாகி வருகிறது. டெல்லியில் 120 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு கோடை வெயில் வாட்டி வருகிறது. தலைநகர் டெல்லி, ஜம்மு காஷ்மீரில் கூட வெயில் அதிகமாகி இருக்கிறது. ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் சொல்லவே தேவையில்லை. டெல்லியில் அதிகபட்சமாக முங்கேஷ்பூரில் நேற்று 120 டிகிரி வெயில் பதிவானது. மேலும், சப்தர்ஜங், நஜாப்கர், பிதம்புரா உள்ளிட்ட இடங்களில் 114 முதல் 115.5 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வெளுத்தது. இதனால், மக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் தவித்தனர். இதனால், டெல்லிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகரில் அதிகப்பட்சமாக 119 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இம்மாநிலத்தில் பிகானிர், கரவ்லி, சங்கரியா, ஜெய்சல்மார், ஆல்வார் உட்பட 23 மாவட்டங்களில் 117 முதல் 118 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டியதால், சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல், வட மாநிலங்கள் பலவற்றில் அனல் காற்று வீசியதால் மக்கள் தவித்தனர். நாளை மறுதினம் வரையில் இந்த கொடுமை நீடிக்கலாம் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. குளிர் பிரதேசமான ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் கூட, நேற்று 110.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் நிலவியது. டெல்லியில் இன்று முதல் 18ம் தேதி வரையில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ அல்லது ஆலங்கட்டி மழையோ பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags : Delhi ,Rajasthan , Northern States Suffering 120 Degree Sun In Delhi: Burning In Rajasthan
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை