நாளை மறுநாள் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இலங்கையில் தாக்குதல்? இந்திய உளவுத்துறை தகவலால் உஷார் நிலை

கொழும்பு: முள்ளிவாய்க்கால் நினைவு தினமான நாளை மறுநாள் இலங்கையில் தாக்குதல் நடத்த விடுதலை புலிகள் திட்டமிட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறை கூறியதாக செய்திகள் வெளியானதால், இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கையில் கடந்த 2005ம் ஆண்டு அதிபராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சே, ஈழப்போரை முடிவுக்கு கொண்டு வர, பல்வேறு வௌிநாடுகளின் மறைமுக உதவியுடன் திட்டமிட்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தினார். லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பெண்கள், குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

பல்வேறு உலக நாடுகள், ஐநா போன்ற அமைப்புகளின் எச்சரிக்கையையும் மீறி மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. அப்போது, ராணுவ அமைச்சராக இருந்தவரும், தற்போதைய இலங்கை அதிபருமான கோத்தபய தலைமையில் 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. மே 18ம் தேதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாகவும், போர் முடிவுக்கு வந்ததாகவும் முள்ளிவாய்க்காலில் இலங்கை அறிவித்தது. அந்த நேரத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த மகிந்த ராஜபக்சே, மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினார்.

விமானத்தில் இருந்து இறங்கியதும், மண்டியிட்டு இரு கைகளையும் கூப்பி தலை வணங்கினார். இந்த புகைப்படம் பேசும் பொருளாக மாறியதை தொடர்ந்து, மகிந்த ராஜபக்சேவை சிங்களர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் ஈழ போருக்காக உயிர் விட்ட தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமைதி வழியில் போராடிய மக்கள் மீது கூலிப்படை மூலம் தாக்குதல் நடத்தியதால், அன்று எந்த சிங்களர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்களோ, இன்று அதே சிங்களர்களால் ராஜபக்சே குடும்பம் துரத்தி அடிக்கப்பட்டு வருகிறது. வன்முறை வெடித்ததை அடுத்து கடந்த 9ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். பின்னர், உயிருக்கு பயந்து, இறுதி போரில் 4 லட்சம் தமிழர்கள் தஞ்சம் புகுந்த திருகோணமலை கடற்படை தளத்தில் மகிந்த ராஜபக்சே இன்று தஞ்சம் புகுந்து உள்ளார்.

இந்நிலையில், நாளை மறுநாள் (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் விடுதலை புலிகள் இலங்கையில் தாக்குல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய உளவுத்துறை தெரிவித்ததாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், இலங்கை அரசு பீதி அடைந்துள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி, கண்காணிப்பையும், ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்தி இருக்கிறது. இது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய பாதுகாப்பு தொடர்பாக உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரால் பெறப்பட்ட அனைத்து தகவல்களும் முறையாக விசாரிக்கப்படும். வன்முறை கும்பல், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அதை பற்றி விவரங்களைத் தெரிவிக்குமாறு பொது மக்களைக் கேட்டு கொள்கிறோம்,’ என்று தெரிவித்துள்ளது.

* ‘கோத்தபய வீட்டுக்கு போ’: பிரதமர் ரணில் ஆதரவு

மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக ‘கோத்தபயவே வீட்டுக்கு போ’ என மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை பாதுகாப்பதோடு, அவர்களுக்கான எதிர்கால கொள்கையை வகுக்க அவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் என்று புதிய பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, பிரபல ஊடகத்திற்கு ரணில் நேற்று அளித்த சிறப்பு பேட்டியில், ‘நாட்டில் அரசியல் அமைப்பில்  மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், இளைஞர்கள் தலைமைப் பொறுப்பை  ஏற்றுக் கொள்வதற்கும் ‘கோத்தபய வீட்டுக்கு போ’ போராட்டம் தொடர வேண்டும்,’ என்று தெரிவித்தார். அதிபர் கோத்தபயவை பதவி நீக்கம் செய்யும் போராட்டத்துக்கு ரணில் ஆதரவு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை நாடாளுமன்றம் கடந்த வாரம் கூடிய போது, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. பின்னர், அங்கு நடந்த வன்முறையால் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அமைச்சரவை கலைப்பால் நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது. அப்போது, கோத்தபய மீது அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்பட பட உள்ளது. இதில் அவருடைய பதவி தப்புமா? என்று தெரியும். அதேபோல், புதிய பிரதமர் ரணிலும் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருப்பதால், அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார் என தெரிகிறது. அப்படி நடந்தால், அதன் மீதும் வாக்கெடுப்பு நடக்கும்.

* அமைச்சரவையில் சேர சிறிசேனா கட்சி முடிவு

இலங்கையில் பிரதமர் ரணில் தலைமையில், ஆளும் இலங்கை  பொதுஜன பெருமுனா கட்சியை சேர்ந்த 4 பேர் மட்டுமே நேற்று முன்தினம் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால், 20 அமைச்சர்கள் பதவியேற்க வேண்டும். எனவே, எதிர்க்கட்சிகள் அனைத்தும் தனது அமைச்சரவையில் இணைந்தால்தான், நாட்டின் பொருளாதார சிக்கலை தீர்க்க ஒற்றுமையாக செயல்பட முடியும் என்று ரணில் தெரிவித்தார். ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசா இதை நிராகரித்து விட்டார். இந்நிலையில், முன்னாள் அதிபர் சிறிசேனாவின் லங்கா சுதந்திரா கட்சி, ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம், ரணில் அமைச்சரவையில் இக்கட்சி  சேரும் என தெரிகிறது.

Related Stories: