×

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி இன்று முதல் 2 நாள் நிறுத்தம்

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை துறையினர் நூல் விலை உயர்வைக் கண்டித்து 2 நாள் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலில், நிட்டிங், ரைசிங், காம்பாக்டிங், டையிங், பிரிண்டிங், எம்பிராய்டரிங் என 55 தொழில் அமைப்புகள் உள்ளன. இந்திய பருத்தி கழகம், பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்யாததால் தொடர்பில்லாத நிறுவனங்களில் லட்சக்கணக்கான பேல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பஞ்சு விலை ஒரு கேண்டி (356 கிலோ) ஒரு லட்சம் ரூபாயை கடந்துள்ளது. வரலாறு காணாத பஞ்சு விலையால் தமிழக நூற்பாலைகளும் அனைத்து ரக நூல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்ட நிலையில், இம்மாதம் மீண்டும் ரூ.40 உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், பஞ்சு நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்றும், நாளையும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை பின்னலாடை துறையினர் அறிவித்துள்ளனர்.  திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உள்பட 36 சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், 2 நாட்கள் முழுமையாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை முடங்கும். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்துவதால் ரூ.350 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Tirupur , Knitting production in Tirupur will be suspended for 2 days from today in protest of rising yarn prices
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...