கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து 501 கன அடியாக அதிகரிப்பு பூண்டி ஏரியில் வேகமாக உயரும் நீர்மட்டம்

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரின் அளவு 501 கனஅடியாக அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகள் நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில், அக்னி வெயில் காரணமாக இந்த ஏரிகளில் நீர்மட்டம் மெல்ல குறைய தொடங்கியது. இந்த ஏரிகளிலும் தற்போது 10 டிஎம்சி நீர்இருப்பு இருந்தது. கோடை வெப்பம் மற்றும் நுகர்வு காரணமாக அதுவே மாத இறுதியில் 7 டிஎம்சி என்ற அளவில் குறைந்தது. இதனிடையே, கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், ஏரிகளில் நீர் இருப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

மேலும், கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய இரண்டாம் தவணைக்கான தண்ணீர் கடந்த 5ம்தேதி முதல் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 293 கன அடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று முன்தின நிலவரப்படி இதன் அளவு 501 கனஅடியாக அதிகரித்துள்ளது.  கண்டலேறு அணையில் இருந்து 1,666 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் தமிழகத்துக்கு 501 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 1,268 மில்லியன் கனஅடியாக உள்ளது. இதன் அளவு இன்னும் சில நாட்களில் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 653 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: