வாலாஜா சிக்னல் அருகே திரும்பியபோது லாரிகள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் காயம்

தண்டையார்பேட்டை: நாகப்பட்டினத்தை சேர்ந்த லாரி டிரைவர் மாதவன்(28), கிளீனர் செல்வம்(27) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டிப்பர் லாரியில்  திண்டிவனத்திலிருந்து எம்.சண்டு மணலை ஏற்றிக்கொண்டு சென்னை கொடி மரச்சாலை வழியாக வாலாஜா சிக்னலை கடக்க முயன்றனர். அப்போது, பிராட்வே டேவிட்சன் தெருவில் உள்ள லாரி செட்டில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு குன்றத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் ராஜசேகர்(34) லோடு மேன்கள் சதீஷ்(27), அருண் பாண்டி(30) ஆகியோர் வந்த லாரி முத்துசாமி பாலம் வழியாக வந்து வாலாஜா சாலையை கடக்க முயன்றது. அப்போது, 2 லாரிகளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு ேநர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லோடு ஏற்றிவந்த டிப்பர் லாரி கவிழ்த்தது. இதனால் லோடு மேன்கள் சதீஷ், அருண்பாண்டி, செல்வம் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை‌ அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய லாரிகளை மீட்டனர். அதிகாலை 2.40 மணிக்கு விபத்து நடந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* குப்பை லாரி டயர் வெடித்து விபத்து

பேசின் பிரிட்ஜ் பகுதியில் இருந்து கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு குப்பைகளை ஏற்றுக்கொண்டு நேற்று காலை குப்பை லாரி வந்துகொண்டிருந்தது. வியாசர்பாடி மேம்பாலம் பகுதியில் ஏறி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையை நோக்கி மேம்பாலத்தில் கீழே இறங்கியபோது லாரியின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் லாரி நிலை தடுமாறி மேம்பால சுவற்றின் மீது மோதி நின்றது. லாரியை ஓட்டி வந்த டிரைவர் சுகுமார்(52), உடனடியாக லாரியில் இருந்து கீழே இறங்கி ஓடினார். லாரியின் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வியாசர்பாடி போக்குவரத்து காவலர் சீனிவாசன் வேறு ஒரு டிரைவரை வைத்து பொதுமக்கள் உதவியுடன் லாரியை  பின்புறமாக இயக்கி மீண்டும் அதனை பத்திரமாக அப்புறப்படுத்தினார்.

Related Stories: