மாதம் ஒரு கிராமத்தை சோலையாக்கும் திட்டம்: ஓராண்டில் 1 லட்சம் மரங்கள் நட புதிய முயற்சி

நெல்லை: மாதம் தோறும் ஒரு கிராமத்தை சோலையாக்கும் திட்டத்தின்படி ஓராண்டுக்குள் தமிழகம் முழுவதும் 1 லட்சம் மரங்கள் நட முயற்சி செய்து வருவதாக நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அர்ஜூனன் தெரிவித்தார். நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (51). சமூக ஆர்வலரான இவர் ‘செப்பறை வலபூமி பசுமை உலகம்’ என்ற அமைப்பை நடத்தி வருவதோடு ராஜவல்லிபுரம் மெயின் சாலையை ஒட்டியுள்ள இடத்தில் நாவல், இலுப்பை, புங்கன், ஆலமரம், அரசமரம், நொச்சி, வேங்கை, வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை விதைகள் மூலம் சிறிய பாக்கெட்டுகளில் வைத்து வளர்த்து வருகிறார்.

மாதம் ஒரு கிராமத்தை சோலையாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பும் இவர், ஓராண்டில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவும் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து கேட்டபோது அவர் கூறுகையில் ‘‘எங்கள் அமைப்பின் மூலம் மாதம் ஒரு கிராமத்தை சோலையாக்கும் திட்டத்தை நாங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறோம். நமக்கு பின்வரும் தலைமுறையினர் நல்ல காற்றை சுவாசித்து, இயற்கையோடு இணைந்து சுகாதாரமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

நெல்லை, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ஈரோடு, நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னை, திருவண்ணாமலை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை 4 லட்சம் மரங்களை நட்டுள்ளோம். இதில் நெல்லையில் புதிய பேருந்து நிலையம், உடையார்பட்டி, தாழையூத்து, பாலாமடை, குப்புக்குறிச்சி, ராஜவல்லிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்களை நட்டுள்ளோம். தற்போது தமிழகம் முழுவதும் ஓராண்டில் 1 லட்சம் மரங்களை நடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

இதற்காக நான் தற்போது 30 ஆயிரம் மரக்கன்றுகளை நாற்றங்கால் அமைத்து வளர்த்தெடுக்கும் பணிகளை இங்கு செய்து வருகிறேன். இப்பணியில் என் சொந்தக்காரர்களும், ஊர்காரர்களும் எனக்கு உதவி செய்து வருகின்றனர். நாங்கள் வளர்த்தெடுக்கும் மரங்களை விரும்பி கேட்டு வருபவர்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகிறோம். எனவே இந்த மரக்கன்றுகளை நீருற்றி வளர்க்க தேவையான மோட்டார் வசதிகளை செய்து தருவதற்கும், கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் இத்திட்டத்தை விரிவுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும்’’ என்றார்.

Related Stories: