×

ஊட்டியில் நேற்று தொடங்கியது: ரோஜா கண்காட்சியில் 31,000 மலர்களால் மர வீடு

ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் நேற்று மலர் கண்காட்சி துவங்கியது. இதில் 31 ஆயிரம் மலர்களால் உருவான மர வீடு மற்றும் பியானோ, மஞ்சப்பை உள்ளிட்ட ரோஜா மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இன்றும் கண்காட்சியை பார்வையிடலாம். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடத்தப்படும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் குன்னூரில் நடத்தப்படும் பழக்கண்காட்சி ஆகியவை புகழ்பெற்றவை. கொரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்த இந்த கோடை விழா இந்த ஆண்டு நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் 7ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. நேற்று முன்தினம் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சியில் 31 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு 15 அடி உயரத்தில் மர வீடு (ட்ரீ ஹவுஸ்), 2 ஆயிரம் ரோஜாக்களால் உருவான பியோனோ அமைக்கப்பட்டுள்ளது. இவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இது தவிர படச்சுருள், பனி மனிதன், கார்ட்டூன் உருவங்கள் மற்றும் மஞ்சப்பை உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, திருப்பூர், தருமபுரி, திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்களை செய்திருந்தனர். மொத்தம் 50 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
ரோஜா இதழ்களால் பல்வேறு வடிவங்களில் அலங்காரங்களும், ரங்கோலிகளும் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று ரோஜா கண்காட்சியை காண பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல லட்சம் மலர்களையும் கண்டு ரசித்தனர். ரோஜா கண்காட்சியை தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், கலெக்டர் அம்ரித், எம்எல்ஏ கணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். இன்றும் கண்காட்சி நடக்கிறது.
பேட்டரி கார் வசதி:
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர்  தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். பல ஏக்கர் பரப்பளவில் உள்ள  இப்பூங்காவை சுற்றிப்பார்க்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு மேல்  ஆகும்.  அதேசமயம், இத்தாலியன் பூங்கா, புதுப்பூங்கா போன்றவைகள்  மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளதால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,  மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் தாவரவியல் பூங்காவை சுற்றி  பார்க்கும் வகையில், பேட்டரி கார் வசதி ஏற்படுத்த வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தற்போது ஒரு பேட்டரி கார் வாங்கப்பட்டுள்ளது. இனி இந்த பேட்டரி கார்  மூலம் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பூங்கா முழுவதும் அழைத்துச்  செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Ooty ,rose , Started yesterday in Ooty: Wooden house with 31,000 flowers at the rose exhibition
× RELATED ரோஜா பூங்கா சாலையில் மரக்கிளைகள் அகற்றம்